நீட் மரணங்களுக்கு உறுதியற்ற நிலைபாடுகளே காரணம்- தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்: ரஞ்சித்!

பா.ரஞ்சித்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ரஞ்சித் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகிறார். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு நீட் தேர்வில் இருந்து விலகுப்பெற்று தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    நிட் விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு விலக்கு பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த 12ம் தேதி நடந்து முடிந்தது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ் இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார். இந்த முறையும் நீட் தேர்வு எழுத அவர் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக தேர்வு நடைபெறும் நாள் அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் சுவடு மறைவதற்குள்ளாகவே அடுத்த நீட் உயிரிழப்பு ஏற்பட்டது.

    அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த  கருணாநிதி-ஜெயலட்சுமி தம்பதியினரின் மகளான கனிமொழி அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வை சரியாக எழுதவில்லை என்று மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் வைத்திருந்தார்.

    நீட் தேர்வு அச்சத்தால் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில், ”நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தினால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்கம் பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்! #BanNeet” என்று தெரிவித்துள்ளார். 

     

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ரஞ்சித் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகிறார். நீட் உருவாக்கக்கூடிய தாக்கம் குறித்து  ஆய்வு செய்ய  ஓய்வு பெற்ற நீதிபதி  ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்திருந்த அவர், கால தாமதமில்லாமல் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: