பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த படங்களில் அசுரன் படமும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா இன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், “படத்தின் வெற்றிவிழா எங்களுக்கு ஒரு மைல்கல் நிகழ்ச்சி. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் எனக்கும், வெற்றிமாறனுக்கும் கொடுத்த சுதந்திரம் தான் இந்தப் படம் அசுரனாக உருவாகக் காரணம். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.க்கு நன்றி. குறிப்பாக வா அசுர வா பாடல் தான் படத்தின் 25 சதவிகித வெற்றிக்குக் காரணம் என்று நான் சொல்வேன்.
அது ஒரு கனாகாலம் படத்தில் அம்மாவை நினைத்து கனவில் இருந்து எழுந்து கதறி அழ வேண்டிய காட்சி. அப்போது எனக்கு 20 வயது. நான் பாலு மகேந்திரா சாரிடம் வெற்றிமாறனை நடித்துக்காட்டும் படி கூறினேன். ப்ராங்க் பண்ண வேண்டும் என்றுதான் அப்படி சொன்னேன். ஆனால் அவர் அப்படியே நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து மிரண்டு போனேன்.
பின்னர் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நான் என்னைப் போல் நடித்தேன். காட்சி படமாக்கப்பட்ட பின்னர் நான் அமைதியாக யோசனையில் அமர்ந்திருந்தேன். பாலு மகேந்திரா சார் என்னை அழைத்தார். என்ன யோசனை என்று கேட்டார். அப்போது நான் நடித்த காட்சி சிறப்பாக இருந்ததா அல்லது வெற்றி நடித்துக் காட்டியது சிறப்பாக இருந்ததா என்று கேட்டேன். அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். எங்கள் இருவரையும் அவர் பிள்ளைகளாகத் தான் பார்த்தார். அன்று முதல் இருவரும் சகோதரர்களாகத்தான் இருக்கிறோம். அதனால் இந்த விழாவில் வெற்றிமாறனுக்கு தனியாக நன்றி சொல்ல வேண்டுமா எனக்குத் தெரியவில்லை.
சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்ததற்காகவே வெற்றிமாறனுக்கு நிச்சயம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தப் படம் ரிலீசாகும் போது நான் லண்டனில் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது எனது அம்மா எனக்கு போன் செய்தார். படம் நல்லா வந்து இருக்கிறது என்று பாராட்டினார். அப்போது வெற்றி வரும் போது நீ தூரமாக இருக்கிறாயே என்றார். இல்லை வெற்றி நமது பக்கத்தில் தான் இருக்கு என வெற்றிமாறனைச் சொன்னேன்.
தோல்வியைத் தான் நாம் தழுவிக்கொள்ள வேண்டும். வெற்றியைத் தூரமாக நின்றுதான் ரசிக்கவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை எப்படிச் சேதப்படுத்தும் எனத் தெரியாது. நம்மை எப்போது எங்கே வைக்க வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும். அதனால் தான் இப்படியொரு வெற்றி கிடைக்கும்போது என்னைத் தொலைவில் இருக்க வைத்துவிட்டார்.
வசனங்களைப் பேசுவதில் அந்த வட்டார வழக்குக்காக மாரி செல்வராஜ் எனக்கான மிகவும் மெனக்கட்டு உழைத்து கொடுத்தார். அசுரன் தனியாக யாருக்கும் சொந்தம் கிடையாது. இது அனைவருக்கும் சொந்தமானது இந்த வெற்றி. எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. மிக மிகக் குறைவுதான். நம்மிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்புக்காக நண்பர்கள் இருப்பதை விட உண்மையை சொல்லும் ஒரு நண்பர் இருந்தால் போதும். அவர் தான் வெற்றி. அதுபோல் ஒரு சிலர் இருந்தால் போதும் அதுவே கிஃப்ட் தான்.
வெற்றிமாறன் குறுகிய காலகட்டத்தில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தார். காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. பாடல்கள் இல்லாமல் கைதி படம் வெற்றி பெற்றிருக்கிறது. ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வரத் தொடங்கியுள்ளன. அது உத்வேகத்தைக் கொடுக்கிறது” என்றார்.
மேலும் படிக்க: ‘இந்த கவிதை என் யோசனை'... வைரலாகும் நா.முத்துக்குமார் மகன் எழுதிய வரிகள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.