நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்கிறீர்களா தனுஷ்... போர்க்கொடி தூக்கும் இயக்குநர் விசு

தனுஷ் | இயக்குநர் விசு

 • Share this:
  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அப்படத்தின் கதை உரிமை குறித்து இயக்குநர் விசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் அந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மேனகா நடித்த கேரக்டரில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் எனக்கு வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த செய்தி உண்மையாக இருந்தால் அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்திடம் நீங்கள் பேசியிருப்பீர்கள். பாலசந்தரின் மகள் தெரிந்தோ, தெரியாமலோ சில விஷயங்களைச் செய்கிறார்கள். நெகட்டிவ் உரிமை தன்னிடம் இருந்தால் கதை உரிமையை விற்கிறார்கள்.

  இதுமாதிரிதான் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத "இன்று போய் நாளை வா" படத்தின் நெகட்டிவ் உரிமையை வாங்கி வைத்துக் கொண்டு கதை உரிமையை விற்றார்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையா பட வெளியீட்டின் போது பிரச்னை வெடித்தது. யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்களோ எனக்குத் தெரியவில்லை.

  அதேபோல் தான் "தில்லு முல்லு" படத்தின் நெகட்டிவ் உரிமையை பெற்றுக் கொண்டு அதை புஷ்பா கந்தசாமி விற்றார். "சம்சாரம் அது மின்சாரம்" படத்தை மற்ற மொழியில் விற்ற போது என்னிடம் சம்மதம் கேட்டு அதற்காக ஒரு தொகை கொடுத்தார் சரவணன்.

  "வீடு மனைவி மக்கள்" படத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் நான் கதாசிரியர் கிடையாது. ஆனால் ராமநாராயணன் என் ஆஃபிஸ்க்கு வந்து இந்தப் படத்துக்கு நீங்கள் தான் அஸ்திவாரம். உங்களுக்கு என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். எனக்குப் பணம் வேண்டாம் என்றேன்.

  பணத்தை எப்படி பிரிக்கலாம் என்று கேட்ட போது ரூ.10வந்தால் தயாரிப்பாளருக்கு ரூ.5 திரைக்கதை எழுதி படத்தை இயக்கிய கஜேந்திரனுக்கு ரூ.3, அதை நாடகமாக எழுதிய கஜேந்திரனுக்கு ரூ.2 கொடுக்க வேண்டும் என்றேன். அதை ராமநாராயணன் ஒப்புக் கொண்டார்.

  அந்தப் படம் 5 மொழிகளில் விற்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் ராமநாராயணன் என்னை சந்தித்து சரியான முறையில் அனைவருக்கும் பணத்தை பிரித்து வழங்கினார். நான் அதில் எந்தத் தொகையும் பெற்றுக் கொள்ளவில்லை.

  கவிதாலயா நிறுவனமும் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிக்கு விற்கப்பட்ட போது என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலச்சந்தர் என்பவருக்காக நான் வாய் திறக்கவில்லை.

  நெற்றிக்கண் படத்தை தனுஷ் தயாரிக்க திட்டமிட்டுவிட்டீர்களா? கவிதாலயாவிடம் அனுமதி வாங்கிவிட்டீர்களா? அந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதிய வசனகர்த்தா நான். இதை உங்களது மாமனாரிடம் கேளுங்கள் அவர் சொல்வார். இன்று இருக்கும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, சரிதா, லட்சுமியிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள்.

  நடிகர், நடிகைகளால் தான் படம் பேசப்படுகிறது அதை நான் மறுக்கவில்லை. நெற்றிக்கண் படத்தைப் பொறுத்தவரை நான்கு தூண்களாக உழைத்தவர்கள் எஸ்.பி.முத்துராமன், இளையராஜா, பிரமிட் நடராஜன், நான்காவது திரைக்கதை வசனகர்த்தா விசு. பின்னர் எப்படி நெற்றிக்கண் திரைப்படத்தை புஷ்பா கந்தசாமி விற்க தனுஷ் வாங்கலாம். என்ன நடக்கிறது. இது தான் நிறைய எழுத்தாளர்களுக்கு செய்யப்படுகிறது.

  ஒருவேளை படத்தின் அனைத்து உரிமைகளையும் கவிதாலயாவுக்கு கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை புஷ்பா கந்தசாமி என்னிடம்கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். அப்படி எல்லா உரிமைகளையும் விற்கும் போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும். என்னை மொத்தமாக எல்லாம் விற்கமுடியாது.

  தனுஷ் நீங்கள் படம் ஆரம்பித்த பின்னர் நான் வழக்கு தொடுத்தால் வருத்தப்படக் கூடாது. நேரடியாகப் பேசியிருக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தன்மானம் தடுக்கிறது. உங்களை யாரோ இரண்டு பேர் உங்க்ளை அவரது பிள்ளை என்று சொல்லி வழக்கு தொடுத்த போது நான் அதுதவறு என்று கூறி அதற்கான ஆதாரத்தை நான் வெள்யிட்டேன். அதை 25 லட்சம் பேர் பார்த்தார்கள். என்னுடைய பதிவு உங்களுக்கு வழக்கில் சாதகமாக அமைந்திருக்கும். அதற்காக எனக்கு ஒரு போன் பண்ணி நன்றி சொல்லியிருக்கலாமே.

  நீங்கள் முதலில் இயக்கிய பவர் பாண்டி படத்தின் கதையின் சாரம்சம் என்னுடைய பெண்மணி அவள் கண்மணி படத்தின் கதை தானே. உங்களது அப்பா, அந்தப் படத்தின் ராஜ்கிரண் கேரக்டர் உங்களது கதாபாத்திரம் போன்றே சாயல் இருப்பதாக கூறினார். அதை நீங்கள் என்னைச் சந்தித்து சொல்லியிருந்தால் நானும் உங்கள் நெற்றிக்கண் பிரச்னையை பேசியிருப்பேன்.

  நெற்றிக்கண் படத்தை அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றுக் கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும் என்று இப்போதும் கூறிக் கொள்கிறேன். அந்தப் படம் உங்கள் மாமனாருக்கு எப்படி மைல் கல்லாக அமைந்ததோ அப்படி உங்களுக்கும் அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published: