• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Karnan : தன் மக்களின் உரிமைக்காக வாளேந்தி வந்திருக்கும் கர்ணன் -மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?

Karnan : தன் மக்களின் உரிமைக்காக வாளேந்தி வந்திருக்கும் கர்ணன் -மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?

கர்ணன்

கர்ணன்

தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இப்படம் அதை பூர்த்தி செய்ததா? இந்த தொகுப்பில் காணலாம்.

  • Share this:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் நேற்று வெளியானது. பாடல்கள், முன்னோட்டம் என ஒவ்வொன்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்த, கொரோனா இரண்டாவது அலை நேரத்திலும் துணிச்சலுடன் களம் கண்டிருக்கிறான் இந்த கர்ணன். நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம் என்பதால் அதிகாலை சிறப்பு காட்சியுடன் தனுஷ் ரசிகர்கள் இப்படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்படும் தன் மக்களின் உரிமைக்காக கர்ணன் வாளேந்தி வருவதே இப்படத்தின் ஒன் லைன். இதில், தான் பேச நினைத்த ஒடுக்குமுறை அரசியலை காட்சிக்கு காட்சி பொட்டில் அறைந்தாற்போல பேசி மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்திருக்கிறார் மாரிசெல்வராஜ்.

பரியேறும் பெருமாள் படத்தில் இரு பிரிவினருக்கு இடையே உரையாடலை துவக்கி வைத்த மாரி செல்வராஜ், இப்படத்தில் உரிமைக்காக எதிர்த்து நிற்கும் கர்ணன்களின் பக்கம் நின்று பேசுகிறார். பேருந்து செல்லாத ஊர்களின் பின்னணியில் இருக்கும் அரசியலை சமரசமில்லாமல் பேசுவதில் தொடங்கி முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதை, தலை வெட்டப்பட்டிருக்கும் பௌத்த சிலை, நாட்டார் தெய்வங்கள் என குறியீடுகளின் வழியாகவே காட்சிகளின் வீரியத்தை உணர வைப்பது வரை ஒரு தேர்ந்த படைப்பாளியாகவும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

ஏற்கனவே இரண்டு தேசிய விருதுகளை வென்றுவிட்ட தனுஷுக்கு மூன்றாவது தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை எனுமளவு நடிப்பு அசுரனாக மீண்டுமொருமுறை திரையில் மிரட்டியிருக்கிறார். அந்தவகையில் தனுஷின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக கர்ணனுக்கு எப்போதும் ஒரு தனி இடம் இருக்கும்.

தனுசுக்கு அடுத்தபடியாக கனமான ஒரு கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால் மிரட்டி இருக்கிறார். பொடியன்குளம் ஏமராஜாவாக முதல் பாதியில் கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் கலங்க வைக்கும் ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தியிருக்கிறார்.

மேலும் கர்ணனின் தூண்களாக படத்தையே தாங்கி நிற்கிறது சந்தோஷ் நாராயணனின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும். பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட நிலையில் படத்தின் பின்னணி இசையின் மூலம் மேலும் வலு சேர்த்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அதேபோல் 90-களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் கொண்டு வந்ததுடன் அழகியலுடன் அதை கையாண்டிருக்கிறார் தேனி ஈஸ்வர்.

முதல் பாதியில் கொஞ்சம் தொய்வடையும் திரைக்கதை, வலுவில்லாத ஹீரோயின் கதாபாத்திரம் என ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் அதை மறக்கடிக்கச் செய்கிறது படத்தின் இரண்டாம் பாதி.

மொத்தத்தில் தன் மக்களின் உரிமைக்காக வாளேந்தி வந்திருக்கும் இந்த கர்ணன் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துவான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: