• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தர்பார் நஷ்ட விவகாரம்... ரஜினியை சந்திக்க வந்தவர்களுடன் போலீஸ் வாக்குவாதம் - பரபரப்பு

தர்பார் நஷ்ட விவகாரம்... ரஜினியை சந்திக்க வந்தவர்களுடன் போலீஸ் வாக்குவாதம் - பரபரப்பு

  • Share this:
தர்பார் படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ரஜினியிடம் முறையிட வந்த விநியோகிஸ்தர்களை காவல்துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது

நடிகர் ரஜினி நடித்து கடந்த மாதம் வெளியான தர்பார் படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறி வரும் நிலையில், அது தொடர்பாக ரஜினியை நேரில் சந்தித்து முறையிட திரைப்பட விநியோகஸ்தர்கள் ராஜேந்திரன், பன்னீர் செல்வன், பெல் ஆர்ட்ஸ் மணி, கே.கிருஷ்ணன், காளியப்பன், திருவேங்கடம், சரவணன்,மீடியேட்டர் ராஜு, தர்மன் ஆகியோர் ரஜினி இல்லம் அமைந்துள்ள போயஸ்கார்டன் வந்தனர்.

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியதைத் தொடர்ந்து அவருக்கு பலத்த எதிர்ப்பு வந்ததன் காரணமாக அவரது வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் வந்திருந்த விநியோகஸ்தர்களை தடுத்து நிறுத்தினர். தங்களை ரஜினிகாந்த்தை சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று காவல்துறையினருடன் விநியோகஸ்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தரப்பிலிருந்து விநியோகஸ்தர்களை ராகவேந்திரா மண்டபம் சென்று சுதாகரை சந்திக்க சொன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தர்பார் திரைப்பட வட மற்றும் தென் ஆற்காடு விநியோகஸ்தர் திருவேங்கடம், “ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் நம்பியே இந்த படத்தை மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கினோம். தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தர்பார் திரைப்படம் பாட்ஷா அளவிற்கு இருக்கும் என்று ரஜினிகாந்த் சொல்லியதை நம்பியே இந்த திரைப்படத்தை வாங்கினோம்.



9 நாட்கள் விடுமுறை இருந்தும் இந்த படம் 40 சதவீதம் அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தர்பார் படம் 25 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகியபோது தங்களுக்கு 60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், படத்தின் மொத்த பொருட்செலவில் 70 சதவீதம் அளவிற்கு ரஜினிகாந்த் ,முருகதாஸ் ஆகியோருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் எனவே ரஜினிகாந்தை சந்தித்து முறையிடுங்கள் என்று சொல்லிவிட்டனர்

அதனால் கோரிக்கை மனு அளிப்பதற்காகவே ரஜினி வீட்டிற்கு வந்தோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை. அடுத்த கட்டமாக செங்கல்பட்டு மாவட்ட விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் டி. ராஜேந்திரை சந்தித்து இதுகுறித்து பேசவிருக்கிறோம்” என்றார்.

மேலும் படிக்க: பண்டிகைக் காலங்களில் சிறப்புக் காட்சிகளுக்கு அரசே டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் - கடம்பூர் ராஜூ


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: