ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நீங்கள் நினைத்தபடி செயல்படவேண்டுமா?... ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

நீங்கள் நினைத்தபடி செயல்படவேண்டுமா?... ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த தர்பார் பட விநியோகஸ்தர்களுக்கு எதிராக கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொள்வதாக கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் புகார் எழுப்பினர். இதையடுத்து, கடந்த 3-ம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு, விநியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த அடையாளம் தெரியாத 25 நபர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்னை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் தான் இயக்குநராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், சில விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்கொண்டு தனக்கு எந்த மிரட்டல்களும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், காவல்துறையிடம் கொடுத்த புகார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியம் இல்லை என தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விநியோகஸ்தர்கள் மிரட்டியதாக கூறி பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வது, பின்னர், சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக கூறி காவல்துறையில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க வேண்டும் என தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.

மேலும், நீங்கள் நினைத்தபடி சென்னை உயர் நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா? எனவும் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் படிக்க: மாஸ்டர் பட ஸ்டைலில் வியாபாரத்தில் அசத்தும் தனுஷ் படம்!

Published by:Sheik Hanifah
First published:

Tags: A.R.murugadoss