விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் சேர்ந்து நகைச்சுவை செய்து வந்தார். இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் ஏராளம்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா அதிகம் பேசப்பட்டதால் அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி. அதைத்தொடர்ந்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டத் தொடங்கினார் அறந்தாங்கி நிஷா. மேலும் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகவும் அவதாரமெடுத்தார்.
இதையடுத்து பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அறந்தாங்கி நிஷா, தனது நகைச்சுவையான நடவடிக்கைகளாலும், பேச்சுத் திறமையாலும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். கடந்த 12-ம் தேதி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிஷா, விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ், குரேஷி உள்ளிட்டோர் அறந்தாங்கி நிஷாவிடம் அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா எனக் கேட்டு கிண்டலடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த நகைச்சுவையான வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அறந்தாங்கி நிஷாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோவும் லைக்ஸ்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.