முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைப்பேச்சு: முன் ஜாமின் கோரிய பா.ரஞ்சித்

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைப்பேச்சு: முன் ஜாமின் கோரிய பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்

  • Last Updated :

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன் ஜாமின் கோரியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்

தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார்.

அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜராஜ சோழனுக்கு எதிராகப் பேசிய ரஞ்சித்தை நெட்டீசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தநிலையில், ராஜராஜ சோழன் குறித்து பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில்," ஜூன் 5-ம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.

சாதியத்தை எவ்வாறு நீக்குவது?. சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் "செந்தமிழ் நாட்டு சேரிகள்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

நமது வரலாறு, பேரரசன் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் எனக் குறிப்பிடுகிறது. ஆனால், பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் ’கற்காலம்’ என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன்.

இந்த தகவலை பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன்.

எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வீடியோ பார்க்க: அதிமுக அரசை ஆதரிப்பது பற்றி முடிவு எடுக்கவில்லை - எம்எல்ஏ கருணாஸ்

First published:

Tags: Pa. ranjith, Rajarajacholan