‘சில்லுனு ஒரு காதல்’புத்தம் புது சீரியலுடன் 2021-ம் ஆண்டை ஆர்ப்பாட்டமாக தொடங்கும் கலர்ஸ் தமிழ்

‘சில்லுனு ஒரு காதல்’புத்தம் புது சீரியலுடன் 2021-ம் ஆண்டை ஆர்ப்பாட்டமாக தொடங்கும் கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

2021 ஆம் ஆண்டை முன்னிட்டு சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

 • Share this:
  2021 ஆம் ஆண்டை அனைவரும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இணைந்து கொண்டாட தயாராகி வருகின்றனர்.புத்தாண்டு என்றாலே தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த வகையில் 2021 ஆம் ஆண்டை முன்னிட்டு சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

  இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி முதல்  திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியல் ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிக்கும் மற்றும் ஒரு துடிப்பான இளம் வயது பெண்ணிற்கும் இடையே நிகழும் தினசரி சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை அழகாக காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

  பரபரப்பான ஒரு சிறிய நகரம் சூழலின் பின்னணியைக் கொண்ட சில்லுனு ஒரு காதல் நெடுந்தொடர், உயிரோட்டமுள்ள உணர்ச்சிகளும், மென்மையான உணர்வுகளும் நிறைந்த கதைக்களத்தைக் கொண்டு பயணிக்கிறது. சூர்யாவை பார்த்தவுடன் காதலில் விழும் கயல் விழி, அவருடன் புதிய வாழ்க்கையை தொடங்க பல தடைகளை சந்திக்கிறாள்.புதிய வாழ்க்கையை தொடங்கும் இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை போராட்டம் நிறைந்த திருமண வாழ்க்கையாக அமைகிறது.

  மேலும் இந்த புதிய நெடுந்தொடர் பற்றி கலர்ஸ் தமிழின் பிசினஸ் அனூப் சந்திரசேகரன் பேசுகையில்,“உலகெங்கிலும் உள்ள எமது பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்குடன் கூடிய சிறந்த கதையையும் வழங்குகின்ற ஒரு புதிய நிகழ்ச்சியோடு 2021 என்ற புத்தாண்டை தொடங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பார்வையாளர்கள் மத்தியில் மென்மையான காதல் மற்றும் ரொமான்ஸ் பிரிவில் வெளிவரும் நிகழ்ச்சிகள் சிறப்பான வரவேற்பை பெறுகிறது. ஒரு வித்தியாசமான கதையை உயிரோட்டமுள்ளதாக கொண்டு வருவதற்காக இந்த நெடுந்தொடரின் நடிகர்களும் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கின்றனர். இந்த நெடுந்தொடரின் நேர்த்தியான சித்தரிப்பு, பார்வையாளர்களை, கதையோடு ஒன்றிணையுமாறு, மெய்மறக்கச் செய்யுமாறு மற்றும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்பது நிச்சயம்,” என்று கூறினார்.

  ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் நடிகர் சமீர் அஹமது இது பற்றி பேசுகையில், “சில்லுனு ஒரு காதல் என்ற நெடுந்தொடர் மூலம் கலர்ஸ் தமிழில் இணைந்திருப்பது எனக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது. எனது அறிமுக நிகழ்ச்சியிலேயே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பது ஒரு தனிச்சிறப்பான அனுபவமாகும். இந்த நெடுந்தொடரின் கதையும் மற்றும் நிகழ்வுகளும் மனதை ஈர்ப்பதாக இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்விலிருந்தே பார்வையாளர்களால் இந்த நிகழ்ச்சி பெரிதும் வரவேற்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

  கயல்விழி  கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தர்ஷினி, அவரது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், “கலர்ஸ் தமிழ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சில்லுனு ஒரு காதல் நெடுந்தொடரில் கயல்விழி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாகும். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் குணாதிசியங்களை போல எனது கதாபாத்திரம் அமைந்திருப்பதால் பார்வையாளர்கள் அனைவருமே உடனடியாக அந்த கதாபாத்திரத்தோடு தங்களை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள இயலும். எதிர்பாராத திருப்பங்களையும் மற்றும் நிகழ்வுகளையும் இந்த கதை கொண்டிருப்பதால் அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற ஆர்வப்பெருக்கில் பார்வையாளர்களை இந்த நாடகம் கொண்டு செல்லும் என்பது நிச்சயம்.” என்று கூறினார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: