’தலைவி’ படம் மூலமாக ஏற்பட்ட அவமானம் - ஏ.எல் விஜயைச் சாடும் பிரபல எழுத்தாளர்

’தலைவி’ படம் மூலமாக ஏற்பட்ட அவமானம் - ஏ.எல் விஜயைச் சாடும் பிரபல எழுத்தாளர்
அஜயன் பாலா
  • Share this:
’தலைவி’ படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை என்று எழுத்தாளர் அஜயன் பாலா கூறியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். சசிகலா கேரக்டரில் பூர்ணாவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர்.

பாகுபலி பட கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதும் இத்திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படம் ஜுன் 26-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்பட இயக்குநரால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், தனக்கு அவமானம் இழைக்கப்பட்டதாகவும் எழுத்தாளர் அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, “சினிமாவில் நம்பிக்கை துரோகத்தை பலமுறை சந்தித்திருந்தாலும், தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்திக் கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கி விட்டார்கள்.

வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு, எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவரம் என ஒன்றரை வருட என் உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகுக்குத்தல்தான்.

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போது கூட இதுபற்றி வாய்திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார் போல. இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கி கொடுக்கமாட்டார்கள். நட்பிற்காகக் கூட சினிமாவில் ஒப்பந்தமில்லாமல் யாரும் பணிபுரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக் கொள்ளும் கோரிக்கை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பதிவைப் பார்த்த தலைவி படத் தயாரிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்து, நாளை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதி கூறியதால் இந்தப் பதிவை நீக்கியிருப்பதாகவும் எழுத்தாளர் அஜயன் பாலா தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தயாரிப்பு நிறுவனங்களுக்கு கமல்ஹாசன் வைத்த செக்..!
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்