• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Pandemic: உலகளாவிய தொற்று நோய்களும் அதை தழுவிய படங்களும்!

Pandemic: உலகளாவிய தொற்று நோய்களும் அதை தழுவிய படங்களும்!

தொற்றுநோயை மையப்படுத்திய படங்கள்

தொற்றுநோயை மையப்படுத்திய படங்கள்

இன்புளூயன்சாவின் தாக்கத்தில் இருந்து மீண்ட அமெரிக்க திரையுலகம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பல வைரஸ் திரைப்படங்களை தொடர்ந்து உலகத்திற்கு தந்து கொண்டிருந்தது.

  • Share this:
விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ஜமாய்வூ என்ற ஒரு வித்தியாசமான வியாதி குறித்து விளக்கியிருப்பார்கள். நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகள், முன் எப்போதோ ஒரு நாள் நடந்தது போல தோன்றும் இந்த மன தோரணைக்கு ஜமாய்வூ என்று மனோதத்துவ உலகம் பெயர் வைத்துள்ளது. இந்த ஜமாய்வூ நம் சிறுவயதில் நிகழ்ந்த ஒரு நிகழ்வின் பிரதிபலிப்பாக இருக்கலாம் அல்லது நமக்கு தோன்றிய ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் நாம் பார்த்த திரைப்படங்கள் நமக்கு ஜமாய்வூ-வை ஏற்படுத்துவது அவ்வப்போது நிகழும்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது மூன்று கன்டெய்னர்களில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்துச் செல்வது அதுவரை மக்கள் பார்த்திராத ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இதனை தொண்ணூறுகளின் துவக்கத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திருடா திருடா திரைப்படத்தில் முன்னரே காட்டி இருப்பார்கள். இதைப்போல பிச்சைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பணமதிப்பிழப்பு வசனம் உட்பட பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு திரைப்படத்தில் இயக்குனர் ஒருவர் கற்பனையாக சிந்தித்த கதை அப்படியே நிஜத்தில் நடப்பது அவ்வப்போது நிகழும். அப்படித்தான் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும், அதனால் உலகம் சந்தித்திருக்கும் விளைவுகளையும், இதன் பின்னால் உள்ள அரசியல் காரணங்களையும் பல்வேறு கோணங்களில் பல திரைப்படங்களும் பேசியுள்ளன. அந்த திரைப்படங்கள் கற்பனையாக சொல்லப்பட்டது போல, நிஜத்தில் நடைபெறும் கொரானா சோகங்களையும் விலாவாரியாக அலசும் தொகுப்புதான் இது.

COVID 19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிப் போட்டு உள்ளது. சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு நாடுகளே கூட செய்வதறியாது திகைத்து நிற்கிறது. கண்ணுக்குத் தெரியாத வைரஸ் போடும் ஆட்டத்தால் ஒட்டுமொத்த உலகத் தலைவர்களும் கண்கலங்கி நிற்கும் இந்த வேளையில் covid 19 ஏற்படுத்திவரும் பாதிப்புகளை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ள திரைப்படம்தான் கண்டேஜன். ஆயுத பலத்தால் உலகை அச்சுறுத்தி வந்த அமெரிக்கா இந்தியாவிடம் ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரைகளுக்குக்காக கையேந்தி நிற்க வேண்டிய நிலை வரும் என அமெரிக்கர்கள் கன்டேஜன் திரைப்படம் வெளியான நாளில் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கோவிட் 19 வைரஸ் சீனாவிலுள்ள ஒரு ஆய்வுக் கூடத்தில் இருந்து அங்கு பணியாற்றும் ஊழியர் வழியாக அவரது காதலிக்கும், அவர் மீன் வாங்க சந்தைக்குச் செல்ல, சந்தையில் உள்ளவர்களுக்கும் பரவி, சீனாவை பாதித்ததோடு உலக நாடுகளுக்கும் பரவி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல இந்த திரைப்படத்திலும் அழிவுக்குக் காரணமான வைரஸ் சீனாவின் ஒரு பகுதியிலிருந்து உலகம் முழுக்க புறப்படும். கோவிட்19 வைரஸ் வெளவாலிருந்து விலங்குகளுக்கும் பின்னர் மனிதர்களுக்கும் பரவியது என அறிவியல் உலகம் தற்பொழுது கண்டுபிடித்துள்ளது. இதனையும் கண்டேஜன் திரைப்படத்தின் இயக்குனர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே அப்படியே கணித்துள்ளார். இந்த திரைப்படத்திலும் வெளவாலில் இருந்தே வைரஸ் பன்றிகளுக்கு பரவும். பன்றி இறைச்சியை தொட்டுவிட்டு கைகளை சுத்தம் செய்யாத ஒரு சீன சமையல்காரர் வழியாக ஒட்டு மொத்த உலகத்திற்கும் இந்த வைரஸ் பரவுவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற கேட் வின்ஸ்லெட் நாயகியாக நடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் உலகம் முழுக்க கவனம் ஈர்த்தது. இன்றைய தினத்தில் நாடுகள் எதிர்கொள்ளும் ஊரடங்கு உத்தரவுகளை முன்கூட்டியே சொல்லி இருந்த இந்த திரைப்படத்தில், வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஓராண்டு போராடியே மருந்து கண்டுபிடிக்கும் என காட்சிப்படுத்தி திரைப் படத்தை முடித்திருப்பார் தீர்க்கதரிசி இயக்குனர். இதேபோல கொரோனா வைரஸ்க்கும் மருந்து கண்டுபிடிக்க ஓராண்டு ஆகும் பட்சத்தில் ஒட்டுமொத்த உலகமும் மோசமான விளைவுகளை சந்திக்கும் என்பதால் அறிவியல் உலகம் கதிகலங்கி போய்தான் நிற்கிறது.

ஊரடங்கு உள்ளிட்ட வழிமுறைகள் மட்டுமல்லாது பல மருத்துவ முறைகளிலும் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை முன்கூட்டியே இந்த திரைப்படம் கணித்துச் சொல்லியிருந்தது. இதன் காரணமாகவே இந்த திரைப்படத்தை ரசிகர்கள் சிலாகித்து கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா எதிர்கொண்ட மருத்துவ குறைபாடு, வென்டிலேட்டர் பஞ்சம் என அத்தனையும் கண்டேஜன் தரைப்படத்தில் முன்கூட்டியே எப்படி சரியாக காட்சி அமைக்கப்பட்டது என்ற ஆச்சரியம் இன்னும் அமெரிக்கர்களை விட்டு நீங்கவில்லை.

அமெரிக்காவில் உருவான கண்டேஜன் திரைப்படத்தைப் போலவே இந்தியாவில் மலையாளத்தில் வெளிவந்த படம் வைரஸ். கண்டேஜன் திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது போலவே மருத்துவ முறைகளில் முரண் இல்லாமல் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான திரைப்படமாக உருவாகி இருந்த வைரஸ் திரைப்படம் அண்மையில் கேரளாவை வெகுவாக பாதித்த நிபா வைரஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. நிபா வைரஸ் பாதிப்பால் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருந்த கேரள மக்கள் இந்த வைரஸ் திரைப்படத்தை தங்கள் வாழ்க்கையோடு வெகுவாக பொருத்திப் பார்த்துக் கொண்டனர்.

மலையாள திரை உலகம் யதார்த்தத்துக்கு நெருக்கமான வைரஸ் திரைப்படங்களை தந்துள்ள போதும் தமிழில் அந்த அளவிற்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் உலகத்தை உலுக்கிய கொள்ளைநோயை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டிருக்கும். போதிதர்மர் கதையைச் சொல்லி மீண்டும் சீனா ஒரு பயோ வாரில் ஈடுபடுவது போலவும் அதற்காக போதிதர்மர் மீண்டும் அவதரிப்பது போலவும் புனைவாக இந்த கதை முடித்து வைக்கப்பட்டு இருக்கும்.

இதேபோல தசாவதாரம் திரைப்படத்திலும் வைரஸ் கிருமியை ஆயுதமாக பயன்படுத்த அமெரிக்கா ஒரு ஆராய்ச்சியில் இறங்க அந்த கிருமியை அடைத்து வைத்துள்ள கண்டெய்னர், இந்தியா பயணிப்பது போல வர்த்தக ரீதியிலான ஒரு புனைவு கதை பின்னப்பட்டிருக்கும்.

ஏறத்தாழ வைரஸ் கிருமிகள் உருவாக்கப்படுவதற்கு பின்னால் உள்ள அரசியலை உண்மைக்கு சற்று நெருக்கமாக பேசி இருந்த திரைப்படம் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ஈ. ஒரு குறிப்பிட்ட வியாதியை ஏழை மக்கள் மீது செலுத்த ஒரு பணத்தாசை பிடித்த மருத்துவர் முயல்வது போல நாடுகளுக்கு இடையே நடைபெறும் அரசியல் இந்த திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும்.

ஹாலிவுட் திரைப்படங்கள் பேசும் வைரஸ் கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிக மிக சொற்ப அளவிலேயே வைரஸை தமிழ் சினிமா கையாண்டுள்ளது. வைரஸ் என்னும் ஒற்றை வார்த்தையை மட்டுமே வைத்து அதன் பின்னணியில் கதை அமைத்து இதுவரை ஹாலிவுட் திரைப்படம் லட்சம் கோடிகளை வசூலாக அள்ளியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் மிருகம் போல மாறி மற்றொருவரை கடித்தால் அவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர் ஜாம்பியாக மாறி விடுவார் என்ற ஒரு வினோத கற்பனையை வைத்து இதுவரை பல லட்சம் கோடிகளை ஹாலிவுட் திரை உலகம் சம்பாதித்துள்ளது. இந்த ஜாம்பி கதையை பிரதானமாக வைத்து ரெசிடென்ட் ஈவில் என்ற பெயரில் தொடர்ந்து 6 பாகங்கள் திரைப்படங்களாக வெளிவந்து உலகம் முழுக்க ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

மருத்துவ உலகம் இப்படி ஒரு நிகழ்வு சாத்தியமில்லை என்று கூறினாலும் வைரஸ் பரவல் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இந்த ஜாம்பி திரைப்படங்கள் தற்பொழுது வரை கல்லா கட்டி வருகின்றன. ஹாலிவுட்டை ஆட்டிப்படைத்த இந்த ஜாம்பி மோகம் தமிழுக்கும் பரவி மிருதன், ஜாம்பி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.

இப்படி உண்மைக்கு நெருக்கம் இல்லாத ஹாலிவுட் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்க தற்போது உள்ள சூழலை பிரதிபலிக்கும் பல திரைப்படங்களும் ஹாலிவுட்டில் வெளிவந்துள்ளன. வைரஸ் பாதிப்புகளை திரைப்படங்கள் ஆக்குவது 1918-ம் ஆண்டு உலகம் சந்தித்த பெரும் துயரமான இன்ஃப்ளூயன்சா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தொடங்குகிறது. இன்புளூயன்சாவின் தாக்கத்தில் இருந்து மீண்ட அமெரிக்க திரையுலகம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பல வைரஸ் திரைப்படங்களை தொடர்ந்து உலகத்திற்கு தந்து கொண்டிருந்தது. ஆனால் போதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காரணத்தால் இந்த திரைப்படங்கள் தத்ரூபமாக படமாக்கப்படவில்லை. அறிவியல் காரணிகளும், அதன் விளைவுகளும் திரையில் சரியாக சொல்லப் படாததால் இந்த திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை.

ரசிகர்களை கவரும் வண்ணம் வைரஸ் கதையை திரைப்படமாக உலகிற்கு தந்த முதல் திரைப்படம் என the andromeda strain படத்தை சொல்லலாம். ஓரளவு தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டிருந்த காலகட்டத்தில் வானியல் ஆராய்ச்சி உடன் வைரஸ் பாதிப்புகளையும் இணைத்து பேசி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தது. வைரஸ் பரவும் முறை அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் உண்மைக்கு நெருக்கமாக பேசி இருந்த இந்த திரைப்படம் ஏலியன் மூலம் வைரஸ் பரப்பப்படுகிறது என முற்றிலும் கற்பனையான காரணத்தைச் சொல்லி ரசிகர்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியது. எனினும் இன்றளவும் உலகில் வெளிவந்த வைரஸ் தொடர்பான திரைப்படங்கள் என பட்டியல் எடுக்கும்பொழுது the andromeda strain திரைப்படம் அந்த பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்கிறது.

இதேபோல இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த 12 monkeys திரைப்படம் வைரஸ் தொடர்பான திரைப்படங்களில் மிக மிக முக்கியமானது. 2035-ஆம் ஆண்டு நடைபெறுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ஒரு வைரஸ்ஸின் கோரத்தாண்டவத்தை சற்று மிகைப்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. வைரஸின் பாதிப்பால் ஒட்டுமொத்த உலகமும் ஏறத்தாழ அழிவு நிலையை எட்டி இறுதியில் சொற்ப அளவிலான மனிதர்கள் பூமிக்கு அடியில் வைரஸ் பரவாமல் பதுங்கி இருப்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் பிராட் பிட் ஆகியோர் நடித்திருந்த இந்தத் திரைப்படம் மருத்துவத்துக்கு பின்னால் உள்ள மிக முக்கியமான அரசியலை பேசி இருந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க எண்ணி அறிவியல் அறிஞர்கள் சிலர் மனிதர்கள் இயற்கைக்கு எதிராக செயல் ஈடுபடுவதால் மனிதர்கள் அனைவரையும் அழிக்கும் முயற்சியில் இறங்குவதாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

கொரானா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருக்கும் இந்த சூழலில் இயற்கை தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்வதை பார்க்கும் பொழுது இந்த படத்தின் கதை உண்மை தானா என எண்ணத் தோன்றுகிறது. இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயல்படுகிறார்கள் என்ற 12 மன்கீஸ் திரைப்படம் பேசி இருந்த வினோதமான மனநோய் அரசியல் உண்மைதான் என்பது போல உலகின் போக்கு தற்பொழுது அமைந்துள்ளது வருத்தமே.

இந்த வரிசையில் 1995-ஆம் ஆண்டு வெளியான அவுட் பிரேக் திரைபடம் உலகின் மிகச்சிறந்த வைரஸ் திரைப்படம் என திரைத்துறை அறிஞர்கள் கொண்டாடுகின்றனர். இந்த திரைப்படத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் திரையரங்கத்திற்கு திரைப்படம் பார்க்க சென்று மீண்டும் வீடு திரும்புவதால் திரையரங்கத்தில் திரைப்படம் பார்த்த அனைவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சி தற்போது உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவும் விதத்தை அப்படிய காட்சியாக 25 ஆண்டுகளுக்கு முன்னரே காண்பித்திருந்தது பெரும் அதிசயம். மேலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் வைரஸ் தொற்று பரவ, குணப்படுத்த முடியாமல் திணறும் அரசு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கொல்வதுபோல சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிகளையும் அண்மையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், வைரஸ் தொற்று பாதித்த சிலரை கொன்று விட்டார் என பரவிய வதந்திகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

மேலும் வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்தவுடன் வைரஸை பிற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக நாடுகள் பயன்படுத்துவது போலவும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதுவும் சீனா அமெரிக்கா மீது கரோனா வைரஸை ஏவி நிகழ்த்துவதாக கூறப்பட்ட பயோ வார் எனும் வதந்திகளுக்கு உயிரூட்டும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டிருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இவ்வாறாக பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகி வைரஸ் குறித்து பேசி கதிகலங்க வைத்திருந்தாலும் அந்த திரைப்படங்களில் முடிவு அனைத்துமே கொடூர வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் நலமுடன் வாழ்வது போலவே முடிக்கப்பட்டிருக்கும். அதுபோலவே கரோனா வைரஸ்க்கும் மிக விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அனைவரின் எதிர்பார்ப்பும் ஈடேறும் வண்ணம் மிக விரைவில் ஒரு பாசிட்டிவ் கிளைமாக்ஸ் கிடைக்குமென நம்பிக்கையோடு காத்திருப்போம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: