படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் வித்தைக்காரனாக, புதிய உலகங்களை உருவாக்கும் மாயாவியாக, வர்த்தகத்தில் புது எல்லைகளை நிர்ணயிக்கும் வர்த்தகனாக திரைப்படத்திற்கு திரைப்படம் மெருகேறி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராக சாதித்தவர்களில் தற்பொழுது மிக முக்கியமான பெயராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், முதல் திரைப்படமான மாநகரம் படத்திலிருந்து வித்தியாசமான தனது முத்திரையை படத்திற்கு படம் பதித்து வருகிறார்.
லோகேஷ் முதல் திரைப்படமான மாநகரத்தில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நான்கு புள்ளிகளில் நான்கு வெவ்வேறு கதையை துவங்கி நான்கு கதைகளையும் ஒற்றைப் புள்ளியில் நிறைவு செய்திருப்பார். லோகேஷின் இந்த வித்தியாசமான திரைக்கதை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சரியப்படுத்தி இருந்த நிலையில் அடுத்த திரைப்படமான கைதியில் நாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை வணிக ரீதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றி கொரோனா காலத்தில் திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்கள் கூடும் மையமாக மாற முக்கிய காரணமாக திகழ்ந்தார். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கு நோக்கி ரசிகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுத்ததில் லோகேஷ் கனகராஜன் இயக்கத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு.
முதல் மூன்று திரைப்படங்களையும் ஹாட்ரிக் திரைப்படங்களாக வெற்றி பெற வைத்த லோகேஷ் கனகராஜிற்கு நான்காவது திரைப்படத்தில் தனது ஆதர்ச நாயகன் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கட்சிப் பணிகளால் நான்கு ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த கமலால் இனி ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்விகளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முதல் 400 கோடி வர்த்தகமான திரைப்படம் என்ற சாதனையை விக்ரம் திரைப்படம் படைக்க காரணமாக இருந்தார்.
மேலும் தனது முந்தைய திரைப்பட கதாபாத்திரங்களை கொண்டு லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் என்ற புதிய சினிமா உலகம் ஒன்றையும் லோகேஷ் கனகராஜ் படைக்க தற்பொழுது ஹாலிவுட்டில் உள்ள மார்வெல் சினிமா டிக்கெட் யூனிவர்ஸ் போல லோகேஷின் LCUவும் அதற்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது.
லோகேஷ் உருவாக்கிய திரை கதாபாத்திரங்களான டில்லி, ஏஜெண்ட் விக்ரம், ரோலக்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு தனி ரசிகர் வட்டம் உருவாகி உள்ளதால் இந்த கதாபாத்திரங்களை தனித்தனியாக திரைப்படமாக்கும் திட்டத்திலும் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
மேலும் தனது திரைப்படங்களில் நடிக்கும் சிறிய கதாபாத்திரங்களை கூட சுவாரஸ்யமாக ஒரு வலிமை மிகு கதாபாத்திரமாக மாற்றும் வல்லமை கொண்ட லோகேஷ் கனகராஜ் ஏஜென்ட் டீனா போன்ற சில துணை கதாபாத்திரங்கள் மூலமாகவும் தனது சினிமாடிக் யூனிவர்சுக்கு பலம் சேர்த்துள்ளார்.
தற்பொழுது தமிழின் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான லியோ திரைப்படத்தை உருவாக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இன்னும் பல மைல்கள் பயணிக்க அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lokesh Kanagaraj