ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ்நாட்டில் குறைவான வசூலைப் பெற்ற காந்தாரா… காரணங்கள் என்ன?

தமிழ்நாட்டில் குறைவான வசூலைப் பெற்ற காந்தாரா… காரணங்கள் என்ன?

காந்தாரா

காந்தாரா

நில அரசியல் குறித்த குறைந்தபட்ச பார்வை உள்ளவரும் காந்தாரா படம் முன்வைக்கும் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காந்தாரா திரைப்படம் கடந்த வாரம் உலக அளவில் நானூறு கோடி வசூலைக் கடந்தது. கே ஜி எஃப் இரு பாகங்களைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் அதிகம் வசூலித்த கன்னடப் படம் காந்தாரா ஆகும். உண்மையான பான் இந்தியா திரைப்படமாக கர்நாடகாவுக்கு வெளியேயும் பாராட்டையும் வசூலையும் காந்தாரா பெற்றது.

நடிகர் ரஜினிகாந்த் காந்தாரா படத்தின் நாயகனும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியின் நடிப்பையும் இயக்கத்தையும் வெகுவாக பாராட்டி இருந்தார். சென்னை வந்த ரிஷப் ஷெட்டி ரஜினிகாந்தை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் உள்ள திரை பிரபலங்கள்,  பல அரசியல் பிரமுகர்கள் காந்தாரா திரைப்படத்தை பாராட்டினர். வெளிநாடுகளிலும் படம் நல்ல வசூலை பெற்றது. கடந்த வார நிலவரப்படி அதன் வசூல் விவரம்...

கர்நாடகா - 168.50 கோடிகள்

ஆந்திரா, தெலுங்கானா - 60 கோடிகள்

தமிழ்நாடு - 12.70 கோடிகள்

கேரளா - 19.20 கோடிகள்

வட இந்தியா (இந்திப் பதிப்பு) - 96 கோடிகள்

வெளிநாடு -  44.50

மொத்தம் - 400.90 கோடிகள்

இந்தியா மற்றும் வெளிநாடுகளின் மொத்த வசூலை எடுத்துக் கொண்டால் பிற பகுதிகள் அனைத்தையும் விட தமிழ்நாட்டில் மிகக் குறைவாக 12.70  கோடிகளை மட்டுமே காந்தாரா வசூலித்துள்ளது. தமிழ்நாட்டை விட குறைவான திரையரங்குகள் உள்ள கேரளாவில் தமிழ்நாட்டை விட அதிகமாக 19.20 கோடிகளை வசூலித்துள்ளது.

காந்தாராவின் இந்திப் பதிப்பு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. ஒப்பீட்டளவில் தமிழகத்தை விட வட இந்தியாவுக்கு காந்தாரா கதைக்களம் அந்நியமானது. எனினும் தமிழ்நாட்டில் காந்தாரா குறைவாகவும் வட இந்தியாவில் மிக அதிகமாகவும் வசூலித்துள்ளதற்கான காரணம் என்ன?

காந்தாரா திரைப்படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும் கடவுள் குறித்த தொன்மத்தைத் தவிர பிற அனைத்தும் வழக்கமான வணிக சினிமாவில் வருகிற கதையையும் காட்சியையும் கொண்டவை. பழங்குடியினரோ பட்டியலின மக்களோ யாராக இருப்பினும் அவர்களை ஒடுக்குகிறவர்கள் ஜமீன்தார், பண்ணையார் போன்ற நிலச்சுவன்தார்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அரசும் அரசின் அங்கமான காவல்துறையும் பக்கபலமாக இருக்கும். இவர்களின் துணையுடன் பண்ணையார்கள் மக்களை ஒடுக்கி சுரண்டுவார்கள். சுரண்டப்படும் மக்களிலிருந்து எழும் ஒருவன் இந்த அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுப்பான்.

வளமையான தமிழ் சினிமாவில் வரும் இதே கதை தான் காந்தாராவும். படத்தின் இறுதியில் அந்த இளைஞன் தலைமையிலான ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றி பெறுவார்கள். காந்தாராவில் இந்த கதையுடன் கடவுள் குறித்த தொன்ம கதை ஒன்றையும் இணைத்து, மக்களை சுரண்டும் பண்ணையாருக்கு எதிராக அரசு இயந்திரமான வனத்துறை செயல்படுவதாகவும் மக்களை அது காக்க தயாராக இருப்பதாகவும் காட்டியுள்ளனர்.

பழங்குடி மக்கள் அரசுக்கு தங்களின் பூர்வீக வசிப்பிடமான காடுகளை விட்டுத் தர வேண்டும் என்ற ஒரு புதிய இதுவரை கேள்விப்படாத நிலைப்பாட்டையும் தந்து இந்த படம் முடிகிறது. அதனை பெருவாரியான மக்கள் நம்பும் கடவுளின் தீர்ப்பாகவும் காந்தாரா முன் வைக்கிறது.

நில அரசியல் குறித்த குறைந்தபட்ச பார்வை உள்ளவரும் காந்தாரா படம் முன்வைக்கும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காலா போன்ற திரைப்படங்கள் நில அரசியல் குறித்தும், அதில் ஆளும் வர்க்கம் நடத்தும் சூழ்ச்சிகள் குறித்தும் விரிவாக பேசியுள்ளன. அதன் காரணமாக தமிழ்நாட்டில் நில அரசியல் குறித்த விழிப்புணர்வு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம் என்றே கூற வேண்டும்.

மேலும் பிற மாநிலங்களில் காந்தாரா திரைப்படத்தை பாராட்டியே அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. மாறாக தமிழ்நாட்டில் காந்தாரா திரைப்படத்தின் வளமையான வணிக சினிமா காட்சிகளையும், ஆணாதிக்க காதல் காட்சிகளையும் விமர்சிக்கும் பதிவுகளையும், விமர்சனங்களையும் அதிகம் பார்க்க முடிகிறது. இவையே காந்தாரா திரைப்படம் பிற மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாட்டில் அதிகம் வசூலிக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது.

பழங்குடியினர் போன்ற தொல்குடிகளின் தெய்வங்கள் பெரும் தெய்வங்கள் போல புராண கதையாடல்களில் இருந்து உருவானவர்கள் அல்ல. அவர்கள் அம்மக்களின் முன்னோர்கள். இந்த மண்ணில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து மறைந்தவர்கள். மக்கள் நலன்களுக்காக போராடி மரித்தவர்களையே தொல்குடியினர் கடவுளாக வழிபட்டு வந்தனர்.

கிராமப்புறத்தின் சுடலை மாடனும்,  இசக்கியும் அவ்வாறு வந்தவர்கள். காந்தாராவில் இந்த தொன்மம் பெருந்தெய்வ கதையாடலை போல மக்களிடமிருந்து மறைந்து முடிவின்மையே எட்டுவதாக காட்டியுள்ளதும் தொல்குடி கடவுள் மரபுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் பல்வேறு விமர்சனங்களின் வழியாக தமிழகத்தில் முன்வைக்கப்பட்டது காந்தாரா திரைப்படத்தின் வசூலை இங்கே மட்டுப்படுத்தியது எனலாம்.

First published:

Tags: Kollywood