Home /News /entertainment /

ஏன் சில படைப்புகள் மோசமாக உள்ளன? - தமிழ் சினிமாவை விளாசிய பிரபல எழுத்தாளர்

ஏன் சில படைப்புகள் மோசமாக உள்ளன? - தமிழ் சினிமாவை விளாசிய பிரபல எழுத்தாளர்

பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர்

பஞ்சு அருணாசலம் அவர்களின் திரைக்கதை பங்களிப்பால் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமலுக்கு எமோஷனலான ஒரு ஃபிளாஷ்பேக் அமைந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பட்டுக்கோட்டை பிரபாகர் தமிழகம் அறிந்த எழுத்தாளர். பல படங்களுக்கு திரைக்கதை, வசனத்தில் பங்களிப்பு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏன் சில படைப்புகள் மோசமாக உள்ளன, தமிழ் சினிமாவில் திரைக்கதையாசிரியர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என சமூகவலைத்தளத்தில் கடுமையான அதேநேரம் முக்கியமான விமர்சனத்தை வைத்துள்ளார். திரையுலகினர் அனைவரும் படிக்க வேண்டிய விஷயம் அது.

"திரைத்துறையில் எனக்கு அறிமுகமான, அறிமுகமாகாத பலரும் என்னிடம் தங்கள் கதையைச் சொல்லி அதைப் பற்றி என் கருத்தைக் கேட்க வேண்டும் என்பார்கள்.

அந்த ப்ராஜெக்டில் நான் இல்லை என்கிற பட்சத்தில் கூடுமானவரை தவிர்த்து விடுவேன். தவிர்க்கவே இயலாத முக்கியமானவர்கள் என்றால் மட்டும் தர்மசங்கடத்துடன் ஒப்புக் கொள்வேன்.

வருவார்கள். இரண்டு மணி நேரம் கதை சொல்வார்கள். நன்றாயிருக்கிறது, நன்றாகயில்லை என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. உடனே மனதில் தோன்றும் குறைகளையும், அதை இப்படியெல்லாம் சரி செய்யலாம் என்றும் கடகடவென்று சொல்லிவிடுவேன். குறைகளை மட்டும் சொல்லிவிட்டு அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்லாமல் இருக்க மனசும் புத்தியும் கேட்காது. நன்றி சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.
இதையே தெலுங்கில் அறிமுகமில்லாத சில நிறுவனங்கள் கதை கேட்டு, கருத்து சொன்னபோது விமான டிக்கெட் போட்டு வரவழைத்து, நல்ல ஹோட்டலில் தங்கவைத்து செக்கும் கொடுத்தனுப்பினார்கள்.

ஹிந்தியில் பலரும் இதை முழுநேர தொழிலாகவே செய்து வருகிறார்கள். இதற்குப் பெயர் ஸ்க்ரிப்ட் டாக்டரிங். இன்னென்ன குறைகள் என்று பட்டியல் மட்டும் போட்டுக் கொடுத்தால் ஒரு ரேட், அதை எப்படி சரி செய்யலாம் என்று சொன்னால் கூடுதல் ரேட்.

ஒரு மருத்துவர் உங்கள் நண்பர் என்றால் அவர் தரும் மருத்துவ ஆலோசனை இலவசமா? ஒரு வக்கீல் உங்கள் நண்பர் என்றால் அவர் தரும் ஒரு சட்ட ஆலோசனையை இலவசமாக எதிர்பார்க்கலாமா? மருத்துவ அறிவு, சட்ட அறிவுப் போலத்தானே திரைக்கதை அறிவும்? தமிழ் சினிமா உலகில் மட்டும் ஏன் சிலர் எதையும் இலவசமாகவே எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.

பிரமாண்டமான செட்டிங்ஸ், வெளிநாட்டில் படப்பிடிப்பு, கிராஃபிக்ஸ், கேரவன் வேன்கள், நடிகர், நடிகைகளுக்கான பாடிகார்ட்ஸ் என்று கோடி கோடியாக செலவழிக்கத் தயாராக இருக்கும் பலரும் மிக முக்கியமான விஷயமான திரைக்கதை என்று வரும் போது மட்டும் செலவுக்குத் தயங்குவதே சில மோசமான படைப்புகள் வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.

என் நெருக்கமான நண்பர்களில் சிலர் படங்களைப் பற்றி என்னிடம் கருத்துச் சொல்லும் போது, 'ஏண்டா... படம் முழுக்க எடுத்திட்டு நாலு பேருக்காவது போட்டுக் காமிச்சி அபிப்ராயம் கேக்க மாட்டாங்களா?' என்பார்கள்.

'நல்லா இருக்கு, சூப்பர், பின்னிட்டீங்க... என்று மட்டுமே சொல்கிற நபர்களுக்கு மட்டும் போட்டுக் காட்டுவார்கள்' என்பேன்.தமிழில் முன்பு செயல்பட்ட அத்தனை திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிலும் திரைக்கதை இலாக்கா என்று ஒரு தனிப்பிரிவு வேலை பார்த்தது என்பது இன்றுள்ள படைப்பாளிகள் பலருக்கும் தெரியுமா என்றேப் புரியவில்லை. பஞ்சு அருணாசலம் அவர்களின் திரைக்கதை பங்களிப்பால் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமலுக்கு எமோஷனலான ஒரு ஃபிளாஷ்பேக் அமைந்தது.

திரைக்கதையில் பழுத்த அனுபவசாலிகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள சில புதிய படைப்பாளிகளுக்கு பக்குவம் போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி