Who Killed Sara? த்ரில்லர்-ரொமான்ஸ் வெப் சீரிஸ் பிரியர்களுக்கு பிடிக்கும் ‘ஹூ கில்டு சாரா?’

ஹூ கில்டு சாரா

ஹாலிவுட் படங்களில் எப்போது முத்தக்காட்சி வரும் என்று தெரியாது. ஈரோப்பியன் படமென்றால் உடலுறவுக் காட்சி எப்போது வரும் என்று பயந்து கொண்டே பார்க்க வேண்டும். இந்த வெப் சீரிஸில் உடலுறவுக் காட்சிகள், ஹோமோ செக்ஸ் எல்லாம் மானாவரியாக வருகிறது.

  • Share this:
Who Killed Sara? வெப் தொடர் 2021, மார்ச் 24-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது. மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான இது, ஒரு மெக்சிகன் தயாரிப்பு. பொதுவாக ஒரு வெப் தொடரின் முதல் சீஸன் வெளியாகி, ஒரு வருடம் ஆன பிறகே அதன் இரண்டாவது சீஸன் வெளியாகும். குறைந்தபட்சம் ஆறு மாதமாவது எடுத்துக் கொள்வார்கள். Who Killed Sara? தொடரின் இரண்டாவது சீஸன் இரண்டே மாதத்தில் அதாவது - 2021, மே 19-ம் தேதி வெளியானது.

முதல் சீஸனின் முதல் காட்சியில் சாரா என்ற இளம் பெண், பாரசூட்டிலிருந்து விழுந்து இறந்துப் போகிறாள். பாரசூட்டை யாரோ வேண்டுமென்றே நாசம் செய்திருந்ததே சாரா மரணத்துக்கு காரணம் என தெரிய வருகிறது. இந்த வழக்கில் சாராவின் சகோதரன் அலெக்ஸ் கைது செய்யப்படுகிறான். குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி அலெக்ஸின் நண்பன் ரொடால்ஃபோவின் பெற்றோர் அலெக்ஸை வற்புறுத்துகின்றனர். சாராவும், ரொடால்ஃபோவும் காதலர்கள். ரொடால்ஃபோவின் தந்தை சீஸருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவர்கள் படகு ஓட்டிய போதே சாராவின் மரணம் சம்பவித்தது. அப்போது அலெக்ஸுடன் ரொடால்ஃபோ, அவனது நண்பன், அவனது தம்பி, அவனது வீட்டில் வேலை செய்யும் இளைஞன் ஆகியோர் உடனிருந்தனர். சிறைக்குப்போனால், "இதோன்னு சொல்றதுக்குள்ள வெளியில எடுத்திருவேன், உன் அம்மா மருத்துவச் செலவுக்கு பணம் தர்றேன்" என்றெல்லாம் சொல்லி அலெக்ஸை ஒப்புக் கொள்ள வைக்கிறார்கள். இரண்டோ, மூன்றோ வருடம் சிறைத்தண்டனை தருவார்கள் என்று பார்த்தால், நீதிபதி 30 வருடங்கள் தீட்டி விடுகிறார். பிறகுதான் நண்பனின் பெற்றோர் தன்னை மொத்தமாக காலி செய்ததை அலெக்ஸ் உணர்கிறான்.

இது நடந்து 18 வருடங்கள் கழித்து, நன்னடத்தை காரணமாக அலெக்ஸ் விடுதலை செய்யப்படுகிறான். இப்போது அவன் வளர்ந்த இளைஞன். உன்னையும், உன் குடும்பத்தையும் அழிக்கிறதுதான் முதல் வேலை என்று சீஸருக்கு எதிராக அவன் சீற, பிளாஷ்பேக்கில், யார் சாராவை கொன்றிருப்பார்கள் என்பது அவ்வப்போது வர, முன்பின்னாக நான் லீனியரில் நான் ஸ்டாப்பாக செல்கிறது கதை.

சாராவின் பாரசூட்டை நாசம் செய்தது யார் என்ற கேள்விக்கான பதில், படத்தில் வரும் அனேகமாக எல்லா கதாபாத்திரங்களின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சீசரின் குடும்பத்தை அழிக்கப் போறேன் என்று கிளம்பும் அலெக்ஸ் படிப்படியாக சாராவின் காதலனான தனது நண்பன், அவன் தம்பி, அவனின் சகோதரி எலிசா என எல்லோரிடமும் நட்புப் பாராட்டுகிறான். அலெக்ஸும், எலிசாவும் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள். இதனிடையில் சாரா இறந்தபோது கர்ப்பமாக இருந்தாள் என்பது தெரிய வருகிறது. அதற்கு காரணம் யார் என்ற கேள்வி, சாராவை கொன்றது யார் என்ற கேள்வியைப் போலவே பலர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதன் வழியே சாரா ஒன்றும் சாதாரணப் பெண்ணில்லை என்பதும் தெரிய வருகிறது. அலெக்ஸ் தனது வீட்டில் கண்டெடுக்கும் சாராவின் ரகசிய டைரி பல்வேறு கதைகளைச் சொல்கிறது. தனது வீட்டுத் தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட ஒரு எலும்புக்கூட்டையும் அலெக்ஸ் கண்டுபிடிக்கிறான் என்ற எதிர்பாராத திருப்பத்துடன் முதல் சீஸன் முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது சீஸனில் சாராவின் பிறப்பு குறித்த உண்மைகள் தெரிய வருகின்றன. இறுதியில், சந்தேக வட்டத்துக்குள் வராத ஒரு பெண் கதாபாத்திரம்தான் பாரசூட்டை நாசம் செய்தது என்பதை அறிந்து கொள்கிறோம். அப்பாடா, ஒருவழியா சாரா கொலையாளியை கண்டுபிடிச்சிட்டோம் என நினைக்கையில், எல்லோரும் அவதான் கொலையாளின்னு நினைக்கிறாங்க, அப்படியே நினைக்கட்டும் என்று ரொடால்ஃபோவின் நண்பன் ரகசியமாக யாருக்கோ போன் செய்ய, அட, இன்னுமாடா ரகசியம் வச்சிருக்கீங்க என்ற ஆச்சரிய மற்றும் ஆயாசத்துடன் மூன்றாம் சீஸனுக்கு லீட் தந்து இரண்டர் சீஸனை முடிக்கின்றனர்.

இந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனியே ஒரு வெப் சீரிஸ் எடுக்கும் அளவுக்கு பின்கதைகள் கொண்டிருக்கின்றன. சாராவின் காதலன் ரொடால்ஃ;போவின் தந்தையாக வரும் சீஸர் நித்யானந்தா போல எப்போதும் பெண்கள் புடைசூழ இருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவர் ஒரு சோஷலிஸ்ட். மகனின் காதலியா இல்லை மனைவியா என்று பார்ப்பதில்லை. கிடைக்கிற எல்லோருடனும் உடலுறவு கொள்கிறார். அவரது கேஸினோவில் பிராத்தல் தங்கு தடையின்றி நடக்கிறது. ஹாலிவுட் படங்களில் எப்போது முத்தக்காட்சி வரும் என்று தெரியாது. ஈரோப்பியன் படமென்றால் உடலுறவுக் காட்சி எப்போது வரும் என்று பயந்து கொண்டே பார்க்க வேண்டும். இந்த வெப் சீரிஸில் உடலுறவுக் காட்சிகள், ஹோமோ செக்ஸ் எல்லாம் மானாவரியாக வருகிறது. நொடிக்கொரு திடுக்கிடலுடன் பார்க்க வேண்டும். நான் லீனியர் திரைக்கதையில் மெக்சிகன் சினிமாக்கள் முத்திரைப் பதித்திருக்கின்றன. அமரோஸ் பெரோஸ், பேபெல் திரைப்படங்களை இயக்கிய அலெஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்துவும் மெக்சிகோவை சேர்ந்தவர்தான்.

பரபரப்பாக நகர வேண்டும், கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் பரவாயில்லை என நினைப்பவர்களுக்கு இந்த வெப் சீரிஸ் நல்ல தேர்வாக இருக்கும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: