விபிஎஃப் கட்டண விவகாரம் - புதிய படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியது

மாஸ்டர்

விபிஎஃப் கட்டண விவகாரத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இனிமேல் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும் Virtual Print Fee எனப்படும் விபிஎஃப் கட்டணங்களை எங்களால் செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டும் வரை நாங்கள் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்திருந்தார். இதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் டிஜிட்டல் நிறுவனத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பலமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டியுள்ளது. டிஜிட்டல் நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் 60 சதவீத கட்டணத்தை குறைத்துக்கொள்ள முன்வந்து இருப்பதால் புதிய திரையரங்குகளை வெளியிடலாம் என பாரதிராஜா முடிவு செய்திருக்கிறார்.

மேலும் படிக்க: நயன்தாரா பிறந்தநாளில் இந்து தமிழர் கட்சி வைத்த அதிரடி கோரிக்கை

ஏற்கெனவே நவம்பர் வரை டிஜிட்டல் கட்டணங்களை வசூலிக்க மாட்டோம் என்று டிஜிட்டல் நிறுவனங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் சில புதிய திரைப்படங்கள் வெளியானது. தற்போது பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து இருப்பதால் இனிமேல் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தெரிகிறது.

இதுகுறித்து பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது, “கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே விபிஎஃப் கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன் படி, க்யூப் நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31.3.2021 தேதிக்குள், இந்த விபிஎஃப் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

31.3.2021 தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து விபிஎஃப் கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தின் மூலம், 31.3.2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்”. இவ்வாறு பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: