மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்

கணவர் உடன் மறைந்த நடிகை சித்ரா

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்காததால் ஹேம்நாத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

 • Share this:
  மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக ஹேம்நாத்துக்கு எதிராக
  சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரை சேர்ந்த
  ஆஷா மனோகரன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

  அதில், கடந்த 2011 ம் ஆண்டு 12 ம் வகுப்பு முடித்திருந்த தனது மகள் மாளவிகா மற்றும் அவரது தோழிகள் இருவர் என மூவருக்கும் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக ஹேம்நாத்தை அணுகிய நிலையில் ஒரு சீட்'க்கு 35 லட்சம் என்ற அடிப்படையில் 1 கோடியே 5 லட்ச ரூபாய் ஹேம்நாத்க்கு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

  ஆனால் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தராததால் பணத்தை திருப்பி கேட்ட போது, ஹேம்நாத் 10 லட்ச ரூபாய் மட்டும் ரொக்கம் கொடுத்துவிட்டு வங்கிக்கணக்கில் பணமில்லாத காசோலைகளை கொடுத்து ஏமாற்றியதாகவும், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், ஹேம்நாத்'க்கு எதிராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெ.ஜெ நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்பு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

  பின்னர், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்க்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய போதும், இந்த பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்காததால் ஹேம்நாத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

  பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறையிலிருந்து வெளிவந்த 3 வாரத்திற்குள் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஹேம்நாத்'க்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
  Published by:Vijay R
  First published: