காஷ்மீரில் இந்து பண்டிட் இனத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடந்த வன்முறை குறித்து காஷ்மீன் ஃபைல்ஸ் என்ற படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு பா.ஜ.க சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்க்க வேண்டும் என்று பிரதமர்
மோடி தெரிவித்தார். காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்ப்பதற்கு சில பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இஸ்லாமிய வெறுப்பை விதைக்கிறது என்று சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு சிங்கப்பூர் அரசு தடைவிதித்தது.
விவேக் அக்னிஹோத்ரி அவ்வப்போது அவரது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவிட்டுவருவார். இந்தநிலையில் இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்துவெறுப்பு கடைபிடிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘ஆக்ஸ்போர்டு என்ற இந்து வெறுப்பு பகுதியில் மற்றொரு இந்துக் குரல் அடக்கப்படுகிறது
மனிதத்துக்கான சுற்றுலா வந்துள்ளதன் காரணமாக நான் ஐரோப்பிய நாட்டில் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து நாடாளுமன்றம் ஆகிய மதிப்புமிக்க பகுதிகளில் என்னை விருந்தாளியாக அழைத்தனர். நேற்று அதிர்ச்சியளிக்கும் விஷயம் ஒன்று நடைபெற்றது. நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு நேற்று சென்றபோது, இந்த நிகழ்வை வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.
இது நூறு சதவீதம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மாணவர்களின் போராட்டம் காரணமாக இது நடைபெற்றது. அவர்கள் பாசிஸ்ட். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியை நான் ஆதரிப்பதன் காரணமாக இது நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் விருந்தினராக அழைக்கப்பட்டேன். ஆனால், நான் அங்கு செல்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக மற்றொருவர் பங்கேற்கவுள்ளார் என்றுகூறி என்னுடைய நிகழ்வை ஜூலை 1-ம் தேதிக்கு மாற்றினார்கள். ஜூலை 1-ம் தேதி அங்கு எந்த மாணவர்களும் இருக்க மாட்டார்கள். அவர்கள் என்னை நீக்கம் செய்கிறார்கள்.
திட்டு வாங்கிய கமல்ஹாசனிடம் கைத்தட்டல்கள் வாங்கிய பிக் பாஸ் பிரியங்கா!
இது சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை. அவர்கள் நம்மை பாசிஸ்ட்கள், இஸ்லாமிய வெறுப்பு கொண்டவர்கள் என்று முத்திரை குத்தப்பார்க்கிறார்கள். ஆயிரக்கணக்கான காஷ்மீரி இந்துக்கள் கொல்லப்பட்டது இந்து வெறுப்பு கிடையாதா? ஆனால், உண்மையைச் சொல்லும் இந்தப் படம் இஸ்லாமிய வெறுப்பாகிறது. அவர்கள் என்னை நீக்கம் செய்யவில்லை. அவர்கள் இனப்படுகொலையை நீக்கம் செய்கின்றனர். இந்துக்களை நீக்கம் செய்கின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்துகள் சிறுபான்மையினர். அது சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை’ என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.