மாயஜால மந்திர கதைகளை படமாக எடுத்த பி விட்டலாச்சாரியார் வாரிசு என்ற திரைப்படத்தை எடுத்தாரா? அந்தப் படம் எப்போது வெளியானது? என்று யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த வாரிசு விட்டலாச்சாரியார் எடுத்த திரைப்படத்தின் பெயர் அல்ல. சாட்சாத் விட்டலாச்சாரியாரின் வாரிசேதான். அதாவது அவரது மகன்.
வியாபாரம், சினிமா, அரசியல் என எங்கும் வாரிசுகள் தான் கோலோச்சுகிறார்கள். அதில் தவறு ஏதுமில்லை. விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்திருப்பதால் இந்த வாரிசு பேச்சு இப்போது சற்று அதிகமாகியுள்ளது. ஒருவர் வாரிசாக இருப்பதாலேயே பெரிய இடத்திற்கு வந்து விடுவதில்லை. ஒருவரது தந்தையோ, தாயோ பிரபலமாக இருக்கும் துறையில் அவர்களது வாரிசுகள் நுழைவது சுலபமாக இருக்கலாம். ஆனால் அத்துறையில் நிலைத்துநிற்பது அவர்களின் திறமையை பொறுத்தது.
மாயாஜால திரைப்படங்களை எடுத்த பி. விட்டலாச்சார்யாரும் அவரது விட்டல் புரொடக்ஷன்சும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவை. அவர்களின் படம் என்றால் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடும். அவர் தனது மகன் பி வி சீனிவாசனை இயக்குனர் ஆக்கினார். தமிழில் 1973-ல் வெளிவந்த பெண்ணை நம்புங்கள் திரைப்படம் பிவி சீனிவாசன் இயக்கியதுதான்.
தெலுங்கில் வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்படத்தை வாங்கி பெண்ணை நம்புங்கள் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். ஏவிஎம் ராஜன், ஜெயந்தி பிரதான வேடங்களில் நடித்திருந்தாலும் எம் ஆர் ஆர் வாசு மற்றும் வேலைக்காரராக வரும் தேங்காய் சீனிவாசன் இருவரும் தான் படத்தை கலகலப்பாக நகர்த்தி இருப்பார்கள். கட்டிய மனைவி மீது சந்தேகப்படாதீர்கள் என்ற கருத்தை சிரிக்கச் சிரிக்க சொல்லி இருப்பார்கள் இந்தப் படத்தில்.
பெண்ணை நம்புங்கள் நல்ல வசூலை பெற்றதால் அதற்கு அடுத்து மீண்டும் படம் எடுப்பது என்று முடிவு செய்தார்கள் தந்தையும் மகனும். அதற்காக கதையை தேடிக் கொண்டிருக்கையில் வரப்பிரசாதம் எந்த நாடகம் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அந்த நாடகத்தை எழுதியவர் எஸ் அலெக்சாண்டர் சந்திரசேகர். முழுப் பெயரை சொன்னால் யாருடா இது என்று குழப்பமாக இருக்கும். எஸ்.ஏ.சந்திரசேகர் என்றால் அனைவருக்கும் தெரியும். இன்னும் சிறப்பாக சொல்வதென்றால் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏசி.
வரப்பிரசாதம் கதையை வாங்கி தாய்ப்பாசம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். பிவி சீனிவாசன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர் மோகன். அவர்தான் தாய்ப் பாசம் என்ற பெயரை படத்திற்கு பரிந்துரைத்தவர். இந்த மோகனையும் திரையுலகினருக்கு நன்கு தெரியும். மோகன் என்பதை விட எடிட்டர் மோகன் என்றால் நன்றாகவும், இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோரின் தந்தை என்றால் இன்னும் சிறப்பாகவும் தெரியும்.
பெண்ணை நம்புங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தாய்ப் பாசமும் ஓரளவு ஓடியது. இதனைத் தொடர்ந்து வாலியின் கதை, திரைக்கதை வசனத்தில் அதிசயப் பெண் என்ற படத்தை பி வி சீனிவாசன் இயக்கினார். அந்தப் படத்தை யாரும் வாங்கவில்லை. அத்தோடு விட்டலாச்சாரியார் என்ற மாபெரும் ஜாம்பவானின் வாரிசு பி.வி.சீனிவாசனின் திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தனக்கு சம்பந்தமில்லாத ஹோட்டல் தொழிலில் இறங்கினார்.
அதேநேரம் அவருக்கு தாய்ப் பாசம் படத்தின் கதையைத் தந்த எஸ்.ஏ.சந்திரசேகரனின் வாரிசும், அவரது படங்களில் உதவி எடிட்டர் ஆக பணிபுரிந்த மோகனின் வாரிசுகளும் இன்று தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கிறார்கள்.
பசங்க பட அன்புவுக்கு கல்யாண வயசாச்சா? பொண்ணு யார் தெரியுமா?
வாரிசுகள் திரைத்துறையில் நுழைவது எளிது. ஆனால் நிலைத்து நிற்பது அபூர்வம். அது அவர்களின் திறமையிலும் தகுதியிலும் மட்டுமே அடங்கியிருக்கிறது என்பதற்கு நாம் மேலே சொன்ன சம்பவங்கள் மிகச் சிறந்த சான்று.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema