நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளார்களா? - விஷால் பதில்

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல் மற்றும் நடிகை ஆர்த்தி ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளார்களா? - விஷால் பதில்
விஷால்
  • News18
  • Last Updated: June 12, 2019, 7:39 AM IST
  • Share this:
நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளார்கள் என்று வெளியாகும் தகவல் வதந்தி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. கடந்த 7-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல், திங்கட்கிழமை முடிவடைந்தது. தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர் என 29 பதவிக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் போட்டியிட 90 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்து முடிந்தது.

அதில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பாக்யராஜ் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதே போல் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாஸ், பூச்சி முருகன், குட்டி பத்மினி மற்றும் உதயா ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி, பூச்சி முருகன் மற்றும் பிரசாந்த் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன. 24 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்காக மனுத்தாக்கல் செய்தவர்களில் 52 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


29 பதவிகளுக்கு மொத்தம் 90 பேர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா மற்றும் நடிகை ஆர்த்தி ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 87 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளார்கள் என்று வெளியாகும் தகவல் வதந்தி என்றும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் வரை இதை யாரும் நம்பவேண்டாம் என்றும் விஷால் கேட்டுக்கொண்டார்.

Also watch
First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading