நடிகர் கமல் ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், இயக்குநரை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உட்பட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் அனிரூத் பின்னணி இசை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
விக்ரம் திரைப்படம் வெளியான 3 நாட்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் திரைப்படங்களில் அதிகம் வசூலித்த, ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக விக்ரம் பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் வெற்றி கமல்ஹாசனை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை கமல் எழுதியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அதில், ‘அன்பு லோகேஷ், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களை கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், பொதுவெளியில்,
இதை படிக்க:
மீண்டும் தொடங்கியது ரஜினி - கமல் படங்களுக்கு இடையே வசூல் போட்டி
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்து கொள்ளலாம்.
இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனை தனக்கு கிடைத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட் லட்டர் என லோகேஷ் கனகராஜ் பூரிப்புடம் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.