கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பாடல், வரவேற்பை பெற்றுள்ள அதே நேரத்தில் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. இதேபோல், கமல் இதற்கு முன் சிக்கிய சர்ச்சைகள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்..
களத்தூர் கண்ணம்மா திரைப்படம், தமிழ் திரையுலகிற்கு தந்த குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன்.
மழலை கொஞ்சும் பேச்சு மற்றும் நடிப்பு மூலம் முதல் படத்திலேயே அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. குடியரசுத் தலைவர் கையில் இருந்து அந்த பதக்கத்தை வாங்கியபோது அவருக்கு வயது வெறும் 6 தான் ஆகியிருந்தது.
நடிப்பைத் தாண்டி, கதை, திரைக்கதை, இயக்கம் என பல தளங்களில் தடம்பதித்து, இந்திய அளவில் மிகச் சிறந்த திரைக்கலைஞன் என இடம்பிடித்தவர் கமல்ஹாசன்.
கமல் என்ற திரைக் கலைஞனின் படைப்புகள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றதைப் போலவே, எதிர்ப்புகளையும் எதிர்கொண்டது. சாதி வேண்டாம் என்று சொல்லுகிற சாக்கில் ஒரு சாதியை தூக்கி பிடித்திருக்கிறார் கமல் என்ற சர்ச்சை தேவர் மகன் திரைப்படம் வெளிவந்த நேரத்தில் எழுந்தது.
அந்த சர்ச்சை அடங்கி, அடுத்த சில ஆண்டுகளிலேயே, மற்றொரு சர்ச்சையில் அவர் எடுத்த ஹேராம் சிக்கியது. காந்தியை கொலை செய்த கோட்சேவின் கொள்கைகளை ஆதரிக்கும் விதமாக அமைந்திருந்த கதைக்களமே அதற்கு முக்கிய காரணம்.
பல படங்களில் வித்தியாசமான நடிப்பால் பேசப்பட்ட கமல்ஹாசன், படத்தின் தலைப்பால் மீண்டும் விருமாண்டியில் பேசப்பட்டார். சண்டியர் என பெயரிடப்பட்ட அந்த படத்திற்கு, ஆரம்பத்திலேயே எதிர்ப்பு கிளம்பியது.
சாதியின் பெயரால் எடுக்கப்படும் இப்படம் வெளியே வந்தால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என மிரட்டல் எழுந்தது. இதனால், பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பைத் தொடர்வதற்கு, பாதுகாப்பு தர மறுத்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.
அதன்பிறகு, ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் கொடுத்த கமல்ஹாசன், பின்னர் வைத்த பெயர்தான் விருமாண்டி...
விருமாண்டி திரைப்படத்திற்கு பிறகு, கமல்ஹாசனுக்கு பெரும் வில்லங்கத்தை கொடுத்த திரைப்படம் விஸ்வரூபம். விஸ்வரூபம் திரைப்படம், குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துவதாக எழுந்த சர்ச்சை வெடித்துக் கிளம்ப, நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர, வேறு வழியில்லை என நொந்து கொண்டார் கமல்ஹாசன்...
அடுத்து வந்த உத்தம வில்லன் இந்துகளை இழிவுபடுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், சாதியை இழிவுபடுத்துவதாகக் கூறப்பட்ட சபாஷ் நாயுடு படம் வெளியே வருவதற்கு முன்பே முடங்கிப் போனது...
இந்த வரிசையில்தான் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது விக்ரம் படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடல்...
கமல்ஹாசன் நடித்து 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் பெயரிலேயே, இந்த படத்தை இப்போது இயக்குபவர் லோகேஷ் கனகராஜ்.
கமலின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்றவர்களும் இணைந்துள்ளனர்...
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து வெளியாகி இருக்குகிறது முதல் பாடல்...கமல் எழுதி பாடியிருக்கும் இந்த பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ள அதே நேரத்தில், சர்ச்சைகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது என்பது உண்மை...
ஒன்றியத்தின் தப்பாலே; ஒன்னியும் இல்ல இப்பாலே என்ற வரிகள், மத்திய அரசை மனதில் வைத்து எழுதப்பட்டுள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது...
இன்னும் சில வரிகளோடு இந்த பாடல் டிரெண்ட் ஆகியுள்ள நிலையில், இவற்றை நீக்க வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே, இப்போது தமிழ் சினிமாவில் இதுபோன்ற சர்ச்சைகள் தொடர்கின்றன என்று சிலர் கூறுகின்றனர்.
சர்ச்சைகளை சந்திப்பது கமலுக்கு புதிதில்லை என்றாலும், இதற்கு அவர் என்ன எதிர்வினையாற்றுவார் என்பதே இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan