கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடித்திருந்த க/பெ.ரணசிங்கம் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விஜய்யுடன் அவர் நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படமும் திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ மூலம் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பார் என தெரிகிறது. அவருடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விவேக் ஹர்சன் எடிட்டராக பணியாற்றுகிறார். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.