Home /News /entertainment /

கோடம்பாக்கத்தில் அநாதையாக இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர் - திரைத்துறை அதிர்ச்சி

கோடம்பாக்கத்தில் அநாதையாக இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர் - திரைத்துறை அதிர்ச்சி

இயக்குநர் M.தியாகராஜன்

இயக்குநர் M.தியாகராஜன்

இயக்குநர் M.தியாகராஜன் கோடம்பாக்கம் வீதியில் அனாதை பிணமாக சாலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை வடபழனியில் தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் சாலையில் அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோடம்பாக்கம்… தமிழ் சினிமாவின் முகவரி என்றால் இதே கோடம்பாக்கத்தில் முகவரி இல்லாமல் தொலைந்த மனிதர்கள் ஏராளம். சினிமா கனவுடன்  சென்னைக்கு வருபவர்களுக்கு தெரிந்த ஒரே முகவரி கோடம்பாக்கம். சினிமாவை நம்பி கிராமத்தில் இருந்து வந்து மாநகர காவல் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் M.தியாகராஜன் கோடம்பாக்கம் வீதியில் அனாதை பிணமாக சாலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தியாகராஜனுக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை. DFT படிப்பு முடித்த இவர் சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்திறங்கினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க பிரபு-வை வைத்து வெற்றிக்கு மேல் வெற்றி என்ற படத்தை இயக்கினார். ஏவிஎம் நிறுவனத்தின் 150 வது படமாக விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த மாநகர காவல் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பின்  ஏனோ இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. சொந்த ஊருக்கும் திரும்பி செல்ல மனமில்லாமல் சென்னையில் தங்கியுள்ளார்.

    வாய்ப்புகள் இல்லாததால் கோடம்பாக்கத்தையே சுற்றி வந்துள்ளார். இந்நிலையில்  இன்று அதிகாலை ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் அனாதையாக இறந்து கிடந்துள்ளார். சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாநகர போலீஸார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம்.தியாகராஜன் ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Death, Director, Tamil Cinema, Vijayakanth

    அடுத்த செய்தி