• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay Ajith: விஜய் முதல் அஜித் வரை - இன்ஸ்பிரேஷனால் வந்த இன்னல்கள்!

Vijay Ajith: விஜய் முதல் அஜித் வரை - இன்ஸ்பிரேஷனால் வந்த இன்னல்கள்!

அஜித் - விஜய்

அஜித் - விஜய்

இன்ஸ்பையர் ஆகிறவர்கள் அக்கம் பக்கம் பார்த்து இன்ஸ்பையர் ஆகவும்.

  • Share this:
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டு இன்ஸ்பிரேஷனும் இருக்கிறது. நாவல், சிறுகதை, நிஜ நிகழ்வு ஆகியவற்றால் இன்ஸ்பையர் ஆகி படங்கள் எடுப்பதுண்டு. பிற படங்களின் தாக்கத்தில் புதுப்படத்தை எடுப்பதும் அதிகம். தங்கள் கதைகளுக்கு தேவைப்படும் காட்சிகளை பிற படங்களிலிருந்து எடுத்துக் கொள்ளுவதும் நடக்கிறது. மொத்த கதையையும் எடுத்துக் கொள்ளாமல் ஒன்றோ இரண்டோ காட்சிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் போது, இந்த இன்ஸ்பிரேஷன் பிறருக்கு தெரியாமல் போய்விடும். அப்படி தெரியாமல் போய், பல வருடங்களுக்குப் பிறகு பிரச்சனையான விஷயங்கள் தமிழ் சினிமாவில் நடந்திருக்கின்றன.

1994-ல் மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஜி என்ற படம் வெளியானது. துளசிதாஸ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் முஸ்லீமான சித்திக்கும், இந்துவான முகேஷும் நண்பர்கள். சித்திக்கிற்கு முஸ்லீம்கள் நடத்தும் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிய உத்தரவு வரும். வெளிநாடு செல்லும் கனவில் இருப்பார் சித்திக். முகேஷோ எந்த வேலை கிடைத்தாலும் செய்ய தயாராக இருப்பார். அந்தளவு வறுமை. இறுதியில் சித்திக்கின் அடையாளத்துடன் இந்துவான முகேஷ் அந்த வேலையை ஏற்றுக் கொள்வார். ஆள் மாறாட்டம் தெரிந்தால் தலைபோகும் அபாயம்.

ஒருகட்டத்தில் முகேஷ் முஸ்லீம் அல்ல என்பதை உடன் பணிபுரியும் ஜெகதி ஸ்ரீகுமார் அறிந்து கொள்வார். இதனை பள்ளி நிர்வாகியிடம் சொல்வதற்காக அவர் ஓட, முகேஷ் துரத்த, அந்த நேரம், முகேஷுக்கும் தனது மனைவிக்கும் ரகசிய காதல் இருப்பதாக தவறாக நினைக்கும் மிலிட்டரிக்காரரான பிரேம் குமார் துப்பாக்கியுடன் துரத்த, ஒரு சந்தர்ப்பத்தில் பிரேம்குமாரின் குறி தவறி ஜெகதி ஸ்ரீகுமாரின் கழுத்தில் குண்டு பாய்ந்துவிடும். இன்னும் கொஞ்ச நாளைக்கு பேச முடியாது என்பார் மருத்துவர். நர்ஸிடம் சைகையில் பேப்பர் வாங்கி, நடந்தவைகளை எழுதித் தருவார் ஜெகதி ஸ்ரீகுமார். அந்த நேரம் அங்குவரும் முகேஷ், அந்த கடிதத்தை வாங்கி, உங்களுக்கு லவ் லட்டர் எழுதியிருக்கார் என்று சொல்ல, இனி பேப்பர் இல்ல மருந்துகூட தர மாட்டேன் என்பார் நர்ஸ். ஜெகதியின் நிலைமை பரிதாபமாகிவிடும்.

இதே போன்ற காட்சி விக்ரமனின் பூவே உனக்காக படத்தில் இடம்பெற்றது. விஜய் உண்மையான வாரிசு அல்ல, சங்கீதாதான் உண்மையான வாரிசு என்று அறிந்து கொள்ளும் நபர், அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்வதற்காக ஓடுவார். அப்போது தோப்பில் கத்தி எறிந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவர் வீசிய கத்தி, அந்த நபரின் கழுத்தில் பாய்ந்துவிடும். அவரால் பேச முடியாது. இதுவும் இதன் தொடர்ச்சியாக வரும் காட்சியும் மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஜியை நினைவுப்படுத்தும். மலையாளப் படம் வெளிவந்தது 1994-ல். பூவே உனக்காக வெளிவந்தது 1996.

இந்த இன்ஸ்பிரேஷன் அப்போது பலருக்கும் தெரியாது. அடுத்த வருடம் பாலுமகேந்திரா மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஜியை தமிழில் ராமன் அப்துல்லா என்ற பெயரில் ரீமேக் செய்தார். படத்தில் துப்பாக்கிசுடும் காட்சி இடம்பெற்றது. பூவே உனக்காக படத்தில் வந்த காட்சியை பாலுமகேந்திரா சுட்டு தனது படத்தில் வைத்திருக்கிறார் என உண்மை தெரியாத பலரும் குறைபட்டனர். ராமன் அப்துல்லா மலையாள ரீமேக் என்பதை அறிந்தவர்களுக்கு மட்டும், பூவே உனக்காக காட்சிகள் மலையாளப் படத்திலிருந்து இன்ஸ்பையர் ஆனது என்ற உண்மை புரிந்தது.

இதேபோன்ற இன்ஸ்பையர் சிக்கல் அஜித் படத்திலும் நிகழ்ந்தது.. தெலுங்கில் த்ரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த அத்தரன்கி தாரேதி திரைப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இடைவேளைக்குப் பின் பிரம்மானந்தத்தின் காமெடிக் காட்சிகள் வரும். படத்தின் வெற்றிக்கு அதன் பங்கு முக்கியமானது. பிரம்மானந்தம் நாயகன் பவன் கல்யாண், நாயகி சமந்தாவுடன் ஒரு நாடகம் போடுவார். சமந்தா அகலிகை. பவன் கல்யாண் அகலிகையின் கணவரான ரிஷி. ரிஷி காலையில் குளிக்கச் செல்கையில் அவரது தோற்றத்தில் வந்து அகலிகையை ஆள்கொள்ளும் இந்திரன் வேடத்தில் பிரம்மானந்தம். அகலிகையை இந்திரன் நெருங்குகையில் ரிஷி அவரை அடிப்பார். வீட்டிலுள்ள மொத்த பேரும் சேர்ந்து உதைப்பார்கள். இது சரிவராது என்று கதாபாத்திரத்தை மாற்றுவார். அடுத்தமுறை பிரம்மானந்தம் ரிஷி, பவன் கல்யாண் இந்திரன். அப்போதும் அடி ரிஷியான பிரம்மானந்தத்துக்கே விழும். அதுவும் சரிவராமல் பிரம்மானந்தம் அகலிகையின் வேடத்தை எடுத்துக் கொள்வார். அப்போதும் அவருக்கே அடி விழும். கடைசியில் தனது வேடத்தை இன்னொருவருக்கு தந்து, இயக்குனராக களத்துக்கு வெளியே நிற்பார். அப்போதும் அவருக்கே அடி விழும்.

இந்த காட்சியில் இன்ஸ்பையர் ஆகி சற்று மாற்றி அஜித்தின் வீரம் படத்தில் வைத்தார்கள். பிரம்மானந்தம் இடத்தில் தம்பி ராமையா. முதலில் தம்பி ராமையா ஹீரோவாக வருவார். சந்தானமும், அஜித்தின் தம்பிகளும் சேர்ந்து உதைப்பார்கள். அடுத்து நாயகி. அப்போதும் அவருக்கே அடிவிழும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறும் போதும் அடி மட்டும் அவருக்கே விழும். வீரத்தின் இரண்டாம் பாதி கலகலப்பாக நகர்ந்ததுக்கு தம்பி ராமையாவின் கதாபாத்திரமும் இந்தக் காட்சியும் முக்கிய காரணம். ஆனால், இந்த இன்ஸ்பிரேஷன் யாருடைய கவனத்திலும் வரவில்லை.

வீரம் 2014-ல் வெளியானது. அதனை 2017-ல் தெலுங்கில் ரீமேக் செய்தனர். பெயர் கட்டமராயுடு. ஹீரோ, அத்தரன்டிகை தாரேதியில் நடித்த அதே பவன் கல்யாண். இப்போது தான் முக்கியமான பிரச்சனையே எழுந்தது. வீரத்தில் தம்பி ராமையா இடம்பெறும் காமெடிக் காட்சியை அவர்களால் கட்டமராயுடு படத்தில் வைக்க முடியவில்லை. அத்தரன்டிகை தாரேதியில் இடம்பெற்ற காட்சியை அப்படியே ரிப்பீட் செய்ததாகி விடும். அதனால், அந்தக் காட்சியையே படத்திலிருந்து நீக்கி, தம்பி ராமையா கதாபாத்திரத்தையும் வெகுவாக மாற்றினார்கள். அதனால் சுவாரஸியமின்றி போனது அந்த கதாபாத்திரம். தான் நடித்த படத்தின் காட்சியில் யாரோ ஒருவர் இன்ஸ்பையர் ஆகி, அது தனக்கே பூமராங்காக வரும் என பவன் கல்யாண் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். விளைவு... கட்டமராயுடு ப்ளாப். தம்பி ராமையா கதாபாத்திரத்தை மாற்றியதே தோல்விக்கு காரணமில்லை. ஆனால், நிச்சயமாக அதுவும் ஒரு காரணம்.

இதேபோல் நூறு கதைகள் கோடம்பாக்கத்தில் உண்டு. ஆகவே, இன்ஸ்பையர் ஆகிறவர்கள் அக்கம் பக்கம் பார்த்து இன்ஸ்பையர் ஆகவும். என்றோ ஒருநாள் யாரையோ ஒருவரை அது தாக்கக்கூடும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: