வெளியானது தளபதி 66 அறிவிப்பு: தமிழ், தெலுங்கை குறிவைக்கும் மாஸ்டர் விஜய்- ட்விட்டரைத் தெறிக்கவிட்ட ரசிகர்கள்

விஜய்

விஜயின் 66-வது படத்தை இயக்கவுள்ளதாக தோழா படத்தின் இயக்குநர் வம்ஸி பாய்டிபாலி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் நவம்பர் மாதத்தில் தான் திறக்கப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பெரிய படங்கள் எதுவும் வராமல் காலியான நிலையிலேயே திரையரங்குகளை இயக்க வேண்டிய சூழல் இருந்தது. எந்தப் படங்களும் திரையரங்குகளில் ஓடாத நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி வெளியானது. நீண்ட காலத்துக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

  திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். திரையரங்க உரிமையாளர்கும் மகிழ்ச்சியடையும் வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றி அமைந்தது. இதற்கிடையில், விஜய் அவருடைய 65-வது படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்தார். அந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கிவருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. தற்போதும், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் எப்போது குறையும், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத சூழல் உள்ளது.

  இருப்பினும், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அஜித்தின் வலிமை, ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜயின் தளபதி-65 ஆகிய படங்கள் காத்திருப்பில் உள்ளன. இந்தநிலையில், விஜய் அவருடைய அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான தோழா படத்தின் இயக்குநர் வம்ஸியுடன் விஜய் இணைகிறார். இந்ததகவலை வம்சி தெலுங்கு ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘விஜயின் 66-வது படத்தை நான்தான் இயக்கவுள்ளேன். இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

  இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளுக்கு சேர்த்து உருவாக்கப்படும். கொரோனா ஊரடங்குக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கொரோனா பாதிப்பு ஏற்படவில்லையென்றால் இதுகுறித்து அறிவிப்பு முன்னரே வெளியாகியிருக்கும்’ என்று தெரிவித்தார். இந்த தகவல் வெளியான நிலையில், #Thalapathy66 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: