பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், இயக்குநர் மோகன்ராஜா, ரித்திகா, கரு.பழனியப்பன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பழனியில் துவங்கியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்டது.
டீசர் வெளியிடப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறியிருக்கும் அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, “அன்பார்ந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கு.. மன்னிக்கவும்.. இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும்ஊரே யாவரும் கேளிர்’ படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.
இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியாமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.
திரும்பவும் மன்னிக்கவும். நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்தப் படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக்கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் பின்னணி ஒலிக்கோர்ப்பு செய்யப்படாமல் DI (Digital intermediate) செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.” இவ்வாறு இயக்குநர் வெங்கட் கிருஷ்ணா ரோகாந்த் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.