Vijay Sethupathi: இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

ஜனநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு நிழல் இதழை ஜனநாதன் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநானின் பிறந்தநாள் இன்று. அதனை முன்னிட்டு நிழல் வெளியிட்ட சிறப்பிதழை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    நிழல் இதழ் மாற்று சினிமாவுக்காக தமிழில் கடந்த 20 வருடங்களாக வெளிவரும் சினிமா காலாண்டு இதழ். தமிழக வரலாற்றில், 20 வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் சினிமா மாற்று இதழ் நிழல் மட்டுமே. இதன் ஆசிரியர் ப.திருநாவுக்கரசு இயக்குனர், எஸ்.பி.ஜனநாதனின் நெருங்கிய நண்பர். அரசியல் மற்றும் கலையால் ஒன்றிணைந்த நட்பு இவர்களுடையது. ஜனநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு நிழல் இதழை ஜனநாதன் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளார். இதில் திருநாவுக்கரசு, போராசிரியர் சொர்ணவேல், எழுத்தாளர் சம்சுதின் கீரா உள்பட பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். எஸ்.பி.ஜனநாதன் குறித்தும், அவரது படைப்புகள் பற்றியும் கூடுதலாக அறிய இந்த கட்டுரைகள் உதவும்.

    இந்த சிறப்பிதழை விஜய் சேதுபதி வெளியிட்டார். இன்று நடந்த விழாவில் ஜனநாதனின் நெருங்கி நண்பர் பாவெல் சங்கரிடமிருந்து ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், இயக்குனர் கோபி நயினார், ட்ராபிக் ராமசாமி படத்தின் இயக்குனர் விக்கி உள்பட பலர் இந்த சிறப்பிதழை பெற்றுக் கொண்டனர்.



    சிறப்பிதழ் வெளியிட என்ன காரணம் என்று திருநாவுக்கரசிடம் கேட்டோம். "மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் அரசியல் பேசியவர் எஸ்.பி.ஜனநாதன். பேராண்மையில் பழங்குடியினர் நடத்தப்படும்விதம், சாதிய கண்ணோட்டம் இதைப்பற்றியெல்லாம் பேசினார். ஈ படத்தில் சர்வதேச மருந்து மாஃபியா குறித்து காட்சிப்படுத்தினார். வணிக சினிமாவில் இதுபோன்ற அரசியலை முன் வைப்பது சாதாரணமில்லை. அதை அவர் செய்தார்."

    உங்களுக்கும் அவருக்குமான நட்பு பற்றி சொல்லுங்கள்?

    "நிழல் சார்பாக தொடர்ந்து குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறை நடத்துகிறோம். ஒரு வாரத்தில் எப்படி சினிமா எடுக்க கத்து தருவீங்கன்னு ஜனநாதன் முதலில் ஐயப்பட்டார். பிறகு தருமபுரியில் நடந்த பட்டறையில் வந்து கலந்துகிட்டார். அங்கு நாங்கள் கொடுத்த பயிற்சி அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதனால், ஐந்து பயிற்சிப் பட்டறைகளுக்கு வந்து மாணவர்களுக்கு திரைப்படம் குறித்தும், இயக்கம் குறித்தும் வகுப்பெடுத்தார். மாணவர்களின் படைப்புகளை பார்க்க வேண்டும் என்பதுதான் அவரது முதல் நோக்கமாக இருந்தது. இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள அவர் பணம் வாங்கியதேயில்லை. அவர் காசிலேயே வருவார். வகுப்பு எடுப்பார்."

    அவரது திடீர் மரணம் குறித்து....?

    "அரசியல் சார்ந்து இயங்குகிற இயக்குனர்கள் தமிழில் ரொம்பவே குறைவு. ஜனநாதன் அப்படிப்பட்டவர். அவரது இயற்கை கதை ரஷ்ய நாவலான வெண்ணிற இரவுகள் பதிப்பில் எடுக்கப்பட்டது. பேராண்மை ரஷ்ய நாவலான அதிகாலையின் அமைதியின் தழுவல். சிறந்த படிப்பாளி. அவரது மரணம் பேரிழப்பு."



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: