தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1 மணி நிலவரப்படி 39.61%வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நிலையில் அதில் வித்தியாசமாக சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து பின் பைக்கில் வீடு திரும்பினார் விஜய். அவரது இந்த செயல் அனைவரது மத்தியிலும் பேசுபொருளானது. இதையடுத்து வீட்டுக்கு அருகில் வாக்கு செலுத்தும் மையம் இருப்பதாலும் காரில் அப்பகுதிக்குச் சென்றால் சிரமம் ஏற்படும் என்ற காரணத்தினால் மட்டுமே சைக்கிளில் சென்றதாக அவர் சைக்கிளில் சென்றதாகவும் அவரது மக்கள் தொடர்பாளர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் பேட்டியளித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி விழா ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, “வாக்கு செலுத்துவது மிகவும் முக்கியம். எப்போதுமே நமது ஊருக்கு ஒரு பிரச்னை, கல்லூரிக்கு ஒரு பிரச்னை, நம் மாநிலத்துக்கு ஒரு பிரச்னை என்று அழைப்பவர்களுடன் சேருங்கள். நம் சாதிக்கு ஒரு பிரச்னை, மதத்துக்கு ஒரு பிரச்னை என்று பேசுபவர்களுடன் சேராதீர்கள். அப்படி சொல்பவர்கள் நம்மைத் தூண்டி விட்டு போலீஸ் பாதுகாப்புடன் வீட்டில் இருப்பார்கள். நாம் தான் சிக்கிக் கொள்வோம். புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சு குறித்து இன்றும் விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி தனக்கு எப்போதும் அதே நிலைப்பாடுதான் என்றும் மனிதன் தான் தனக்கு முக்கியம் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.