மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாக ‘லாபம்’ திரைப்படம் இருக்கும் - படக்குழு அறிக்கை

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாக ‘லாபம்’ திரைப்படம் இருக்கும் - படக்குழு அறிக்கை

எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும் அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாகவும் ‘லாபம்’ இருக்கும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி கூட்டணியில் ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வந்தது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி மயக்கமடைந்த நிலையில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மார்ச் 14-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் ‘லாபம்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளையும் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் முடித்துக் கொடுத்து விட்டதாகவும், ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ‘லாபம்’ திரைக்கு வரும் என்றும் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.

  இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

  அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: