இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம் என விஜய்சேதுபதிக்கு வைரமுத்து ஆலோசனை கூறியுள்ளார்.
இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் முத்தையா முரளிதரன். 133 டெஸ்டுகள், 350 ஒன் டே மேட்ச், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
ALSO READ | ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இருக்காது: விஜய் சேதுபதியின் 800 படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். அதேபோல் ட்விட்டர் பக்கத்தில் #ShameonVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் பேசு பொருளானதை அடுத்து ‘800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வாயிலாக விளக்கமளித்தது. அதில், “'800' திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
“கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…
சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.
நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?
இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.” என்று விஜய் சேதுபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்