போஸ்டர்களில் எம்.ஜி.ஆர். ஆக விஜய் - அதிமுக வாக்குவங்கிக்கு குறியா?

சமீபகாலமாக எம்ஜிஆராக நடிகர் விஜயை உருவகப்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிமுகவின் வாக்கு வங்கியை விஜய் குறி வைக்கிறாரா என்ற புதிய கோணமும் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

போஸ்டர்களில் எம்.ஜி.ஆர். ஆக விஜய் - அதிமுக வாக்குவங்கிக்கு குறியா?
விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டர்
  • News18
  • Last Updated: September 7, 2020, 10:13 AM IST
  • Share this:
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தன்னை ஒரு ரஜினி ரசிகனாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது அதிக பாசம் கொண்டவர் என்பதால் திமுகவுடனே விஜய் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். முதல்முறையாக வசீகரா திரைப்படத்தில் எம்ஜிஆர் போல நடனமாடி விஜய் நடித்து இருந்தார்.

காவலன் பட வெளியீட்டின் போது அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக தரப்பில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனால் 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த விஜய், அதிமுக ஆட்சி அமைக்க அணிலாக உதவியதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் தலைவா திரைப்படத்திற்காக கடும் நெருக்கடிகளுக்கு ஆளானார். படத்தில் இருந்த டைம் டு லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டதுடன், தமிழக அரசின் ஆதரவு வேண்டி விஜய் வீடியோ வெளியிட்ட பின்னரே தலைவா திரைப்படம் திரைக்கு வந்தது.
இதன் பின்னர் நேரடியாக அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வந்த விஜய் திரைப்படங்களில் தன்னை ஒரு எம்ஜிஆர் அபிமானியாக காட்ட தொடங்கினார். மெர்சல், பிகில் போன்ற படங்களில் எம்.ஜி.ஆரை. ஞாபகப்படுத்தும் காட்சிகள் அமையுமாறு பார்த்துக்கொண்டார் விஜய்.

இந்த சூழலில்தான் விஜய் ரசிகர்களும் விஜய்யை எம்ஜிஆர் ஆக உருவகப்படுத்தி போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். மதுரை, காஞ்சிபுரங்களை தொடர்ந்து தேனியிலும், எம்ஜிஆரின் மறு உருவமே போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக வாக்கு வங்கி அதிகமுள்ள தேனி மாவட்டத்தில் இப்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் அரசியலில் நுழைந்த போது, கறுப்பு எம்.ஜி.ஆர். என அவரது தொண்டர்களால் அழைக்கப்பட்டதை போல, விஜயையும், அவரது ரசிகர்கள் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது எம்.ஜி.ஆர். அபிமானிகளை குறிவைத்துதான் என்ற தகவல்களும் வெளி வந்த உள்ளன.இதற்கு பதில் அளித்து பேசியுள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போஸ்டர் ஒட்டுவதால் எந்த ஒரு நடிகராலும் எம்ஜிஆர் ஆக மாறி விட முடியாது என குறிப்பிட்டுள்ளார். விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் ஆளும்கட்சியின் கவனத்தை ஈர்த்துள்ளது திரைத்துறையை கடந்து தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading