சர்ச்சைகளால் விளம்பரம் கிடைக்கிறதா...? மாஸ் காட்டும் மாஸ்டர் பிசினஸ் ரிப்போர்ட்!

சர்ச்சைகளால் விளம்பரம் கிடைக்கிறதா...? மாஸ் காட்டும் மாஸ்டர் பிசினஸ் ரிப்போர்ட்!
  • Share this:
'இளைய தளபதி' விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருமாறியிருப்பவர்.

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர்.

விஜய் படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வந்தாலோ, அல்லது பொது இடங்களில் அவர் தோன்றினாலோ அதுதான் அன்று சோசியல் மீடியாவின் டிரெண்டிங் செய்தி. அப்படியிருக்கையில் கடந்த வாரம் முழுக்கவே மீண்டும் ஒரு பரபரப்பான சம்பவத்தில் லைம்லைட்டுக்கு வந்தது விஜய்யின் பெயர்.


விஜய் வீட்டில் ஐ.டி. ரெய்டு என்பதுதான் கடந்த வார தமிழகத்தின் ஹாட் டாபிக். நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்துவந்து அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது நாடு முழுக்க பேசுபொருளாக மாறியது. எதிர்பாரா விதமாக தொடங்கிய இந்த சோதனை, கிட்டத்தட்ட 30 மணிநேரம் வரை நீடித்ததால் சமூக வலைதளங்களிலும் ஓயாமல் வீசியது விஜய் ரசிகர்களின் அலை.

30 மணிநேர சோதனைக்கு பின் விஜய் வீட்டில் ரொக்கம் எதுவும் சிக்கவில்லை என வருமான வரித்துறையினர் அறிவித்ததும் அதை கொண்டாடி தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். அடுத்தகட்டமாக விஜய் தரப்பில் இருந்து அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடனடியாக மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

எனினும் விஜய்யை விடாது துரத்தியது பிரச்னை. மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பா.ஜ.க-வினர் சிலபேர் படப்பிடிப்பை இங்கு நடத்த கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் வெடித்தது சர்ச்சை. ஏற்கனவே விஜய் வீட்டு சோதனையில் அரசியல் தலையீடு இருப்பதாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க-வினர் நேரடியாக களத்தில் இறங்கியதும் சலசலப்பை கூட்டியது.இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவு தரும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு விரைந்ததால் படப்பிடிப்பு களம் பல மணிநேரம் பரபரப்பு களமாக மாறியது. நாளுக்கு நாள் ரசிகர்களின் வருகை அதிகரித்துகொண்டே சென்றதால் சூழ்நிலையை உணர்ந்த விஜய், ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டார். அதன்படி ரசிகர்கள் முன்னிலையில் வேனில் மேல் ஏறி, விஜய் கையசைத்த வீடியோ நேற்று முழுவதும் இணையத்தின் வைரல் வீடியோவாக வலம் வந்தது.

ஆரம்பத்தில் தனது ரசிகர் மன்றங்கள் சார்பில் பொது கூட்டம் கூட்டி தன் ரசிகர்களை சந்திப்பது விஜய்யின் ஸ்டைல். ஆனால் தலைவா விவகாரத்துக்கு பின் ரசிகர்களை சந்திப்பதையும் மாநாடு நடத்துவதையும் தவிர்த்து வந்த விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் முன்னிலையில் தோன்றியிருப்பதால் அவர் ரசிகர்கள் உற்சாகமடைந்ததோடு அதை பல ஹேஷ் டாக்குகளின் மூலம் கொண்டாடியும் வருகின்றனர்.

ரசிகர்களை சந்தித்துவிட்டாலும் ஐ.டி.ரெய்டு குறித்து விஜய்யோ அல்லது அவருடைய சார்பில் அவருடைய தந்தையோ தற்போதுவரை மௌனம் கலைக்கவில்லை. எனினும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து விஜய் பேசுவார் என்பதே அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சமீப காலமாக தன்னுடைய இசை வெளியீட்டு விழாக்களில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேசும் விஜய், மாஸ்டர் விழாவில் ஐ.டி.ரெய்டு குறித்து பேசினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது.

அண்மை காலமாக எந்த படத்துக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும் பின்னாளில் அதுவே அந்த படத்துக்கு இலவச விளம்பரமாக மாறி படம் கல்லா கட்டுவது வாடிக்கையாக மாறிவருகிறது. இதற்கு மெர்சல், சர்கார் என விஜய் படங்களிலிருந்தே பல எடுத்துகாட்டுகளை காட்டலாம். அந்த வகையில் மாஸ்டர் படத்துக்கும் தற்போதே வானளவு எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட அந்த படத்தின் ரிலீஸ் நெருங்கும்போதுதான் வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் இன்னும் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த ஏரியாவும் வியாபாரமாகி சாதனை படைத்துள்ளது.

இதன் தமிழக உரிமம் 68 கோடிக்கும் கேரள வெளியீட்டு உரிமம் ஆறு கோடியே 25 லட்சத்துக்கும் கர்நாடக வெளியீட்டு உரிமம் எட்டு கோடியே 65 லட்சத்துக்கும் தெலுங்கு டப்பிங் உரிமம் ஒன்பது கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.

இதுபோக இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமம் 29 கோடியே 50 லட்சத்துக்கும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 50 கோடிக்கும் ஆடியோ உரிமம் நான்கு கோடியே 50 லட்சத்துக்கும் வியாபாரமாகி அசத்தியுள்ளது. அனைத்து உரிமங்களும் விற்பனையாகிவிட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி டப்பிங் உரிமம் மட்டும் இன்னும் விற்பனையாகாமல் உள்ளது.

வட இந்தியாவில் பிகில் படத்தின் வசூல் மற்றும் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு அதுவும் 23 கோடி வரை வியாபாரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒட்டுமொத்தமாக மாஸ்டர் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே 200 கோடி வரை வியாபாரமாகி இருப்பதாக திரை வட்டாரத்தில் உறுதி செய்யப்படுகிறது.

இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் மாஸ்டர் திரைப்படம் அனைத்து ஏரியாக்களிலும் விற்கப்பட்டு விற்பனையில் சாதனை படைத்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யைத் தாண்டி மாஸ்டர் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக இன்னொரு காரணம் விஜய் சேதுபதி. விஜய்யும் விஜய் சேதுபதியும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் மாஸ்டர் படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. தமிழில் மல்டி ஸ்டாரர் படம் என்பது அரிதிலும் அரிதாக நடக்கும் விஷயம். அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இரண்டு பேரும் இணைந்திருப்பதால் இப்படத்தின் கதை மீதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. விஜய் படத்துக்காக தன்னுடைய கால்ஷீட்டை குளுறுபடி இல்லாமல் இவர் ஒதுக்கி கொடுத்ததே இன்று பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. தற்போது நெய்வேலி நில சுரங்கத்தில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி பங்கேற்கும் காட்சிகளைதான் படக்குழு படமாக்கி வருகின்றனர். அதனால்தான் சோதனை முடிந்த கையோடு உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய்.

இவர்களுடைய காம்பினேஷ் காட்சிகளுடன் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்கின்றனர் படக்குழுவினர். ஐ.டி.ரெய்டுக்கு பிறகு வெளிவரும் விஜய் படம், விஜய் – விஜய் சேதுபதி முதல்முறையாக இணையும் திரைப்படம் என்பதால் மாஸ்டர் படம் வசூலில் புதிய சரித்திரத்தை உருவாக்கும் என தற்போதே பாக்ஸ் ஆபீஸில் வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர்.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading