மாஸ்டரை இந்தியில் இயக்கும் பிரபுதேவா?

விஜய் | பிரபுதேவா

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தை இந்தியில் பிரபுதேவா இயக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
கொரோனா காலகட்டத்தில் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் இந்தியா முழுவதும் பரவி இருந்த நேரத்தில் மாஸ்டர் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் திரையரங்கில் திரண்டதோடு, படத்தையும் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கினர். படத்தை தயாரித்தவர், வாங்கியவர், வெளியிட்டவர் என அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல லாபத்தை மாஸ்டர் கொடுத்தது.

இதையடுத்து மாஸ்டரை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அனேகமாக சல்மான் கான் நடிக்கலாம் என்கின்றன செய்திகள். இந்நிலையில், மாஸ்டரை பிரபுதேவா இயக்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரபுதேவா ஏற்கனவே விஜய் நடித்த போக்கிரியை இந்தியில் சல்மான் கானை வைத்து வான்டட் என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

அடுத்து சிறுத்தை படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் அக்‌ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்கினார். அந்தப் படம் அக்‌ஷய்குமாரின் முதல் 100 கோடி படமாக அமைந்தது. ஆனால், ஆர் ராஜ்குமார், ஆக்ஷன், ஜாக்சன், சிங் இஸ் பிளிங் என்று பிரபுதேவா அடுத்தடுத்து இந்தியில் இயக்கிய படங்கள் தோல்வியடைய, இந்தியில் அவர் படம் இயக்கும் வேகம் குறைந்தது.

எனினும் சல்மான் கான் அவர் மீது நம்பிக்கை வைத்து தபாங் 3 படத்தை இயக்கும் பொறுப்பை அளித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது ராதே என்ற படத்தை சல்மான் கானை வைத்து பிரபுதேவா இயக்கி வருகிறார். தமிழ்ப் படங்களை இந்தியில் இயக்கி அதனை வெற்றிப் படமாக்கிய பிளாஷ்பேக் பிரபுதேவாவுக்கு இருப்பதால் மாஸ்டர் இந்தி ரீமேக்கை அவர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: