நடிகர் அஜித் குமார் எப்பொழுதும் தனது பட ப்ரமோஷன்களில் பங்கேற்பதில்லை என்ற குறிக்கோளோடு இருக்கிறார். மேலும், இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதில்லை, படம் தொடர்பாக பேட்டியளிப்பதில்லை. இருப்பினும் அவருக்கு இருக்கும் ரசிகர் படை அதிகரித்திருக்கிறதே தவிர, துளியும் குறையவில்லை. மேலும் நடிகர் அஜித்தின் படங்கள் வெளியாகும்போது சிறப்பான ஓபனிங் கிடைத்துவருகிறது. தற்போது துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துபாயில் ஸ்கை டைவ் மூலம் துணிவு படத்தின் போஸ்டரை வானில் பறக்கவிட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைகா நிறுவனம் இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறது. மேலும் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு அப்டேட் வெளியாகும் என அறிவித்தனர். வருகிற 31 ஆம் தேதி துணிவு டிரெய்லர் வெளியாகிறது என்பதுதான் அந்த அப்டேட். டிரெய்லரை மிக பிரம்மாண்டமாக துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர ஆகிய இடங்களில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக டிரெண்டிங்கிலிருந்து வாரிசு படத்தை ஓரம் கட்டிவிட்டது. இதைத் தானே எதிர்பார்த்தோம் என அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியின் முந்தைய படங்களான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குக் கூட இப்படிப்பட்ட புரொமோஷன் செய்யப்படவல்லை. இது படத்தின் மீது அப்படக்குழுவினருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் படம் எப்பொழுதும் பரபரப்பு இல்லாமல் சாதாரணமாக வெளியாகும் நிலையில் இந்த முறை மட்டும் ஏன் துணிவு படம் இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்படுகிறது என்றால் வாரிசு தான் காரணம் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
மற்றொரு பக்கம் வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே படத்தை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவதாக விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர். மேலும் நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை என அஜித்தின் கருத்தைக் குறிப்பிட்டு அப்போ துணிவு நல்ல படம் இல்லையா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பிவருகின்றனர். முன்னதாக யார் நம்பர் 1 சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதனை நிரூபிக்கவே வாரிசு படத்துடன் துணிவை வெளியிட அஜித் முடிவு செய்தததாகவும் கூறப்பட்டது.
விஜய், அஜித் இருவரும் தமிழ்நாட்டில் மிகப்பெரும் ரசிகர்கள் சக்தியைக் கொண்டவர்கள். பொதுவாகவே விஜய்க்கு குடும்ப பார்வையாளர்கள் பலம் இருப்பதாக சொல்வதுண்டு. ஆனால் விஸ்வாசம் படத்துக்கு பிறகு நடிகர் அஜித்துக்கும் குடும்ப பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். அப்பா - மகள் சென்டிமென்ட் நிறைந்த விஸ்வாசம் படத்தைக் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கண்டுகளித்தனர் என்பது அனைரும் அறிந்ததே. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பொங்கல் விடுமுறையில் வருவதால் இரண்டு படங்களையும் காண மக்கள் ஆர்வம் காட்டுவர். குறைந்தது ஒரு வாரத்துக்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், அமீர், பாவனி, பக்ஸ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் நீரவ் ஷா தான் ஒளிப்பதிவாளர். ஆனால் முதல் இரண்டு படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த நிலையில் துணிவுக்கு ஜிப்ரான் இசையமைத்தார். வலிமை படத்தின் பின்னணி இசையையும் ஜிப்ரான் தான் கவனித்தார்.
வலிமை படத்தின் போது யுவனுக்கும் இயக்குநர் வினோத்துக்கும் இடையே உருவான கருத்து வேறுபாடு காரணமாகவே ஜிப்ரான் இசையமைத்தார் என்று கூறப்படுகிறது. வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கும் ஜிப்ரானின் இசை பக்கபலமாக அமைந்தது. இருப்பினும் துணிவு பாடல்களைப் பொறுத்தவரை கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகின்றன.
வாரிசாக இருந்தாலும் சரி, துணிவாக இருந்தாலும் சரி படம் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்பது வர்த்தகர்களின் கருத்தாக இருந்துவருகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்திருக்கும் லவ் டுடே. வாரிசு மற்றும் துணிவு இரண்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Thunivu, Varisu