தல-தளபதி - தமிழ்நாட்டின் பாக்ஸ்ஆபிஸ் கிங் யார்?

அஜித்,விஜய்

தற்போதைய சூழலில் விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக இருந்துவருகின்றனர்.

 • Share this:
  தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் ரஜினிதான். அவருக்கு அடுத்த இடத்தில் வருகிறவர் விஜய்யா இல்லை அஜித்தா என்ற கேள்வி பல வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது. அதற்கான பதில்தான் இன்னும் சரியாக விளக்கப்படவில்லை.

  ஒரு திரைப்படத்தின் 60 சதவீதத்துக்கும் மேலான வசூல் திரையரங்குகளிலிருந்தே வருகிறது. தமிழகத்தில் உள்ள சில மல்டிபிளக்ஸ்கள் தவிர மற்ற திரையரங்குகள் டிக்கெட் கணக்கை சரியாக காண்பிப்பதில்லை. பெரும்பாலும் கட்டணத்தைக் குறிப்பிடாத முன்பதிவு கூப்பனைத்தான் டிக்கெட் என தருகிறார்கள். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சொல்லவே வேண்டாம். 500 முதல் 1,000 ரூபாய்வரை டிமாண்டுக்கு ஏற்ப டிக்கெட் விலையை ஏற்றி விற்பார்கள். இதில் எங்கிருந்து ஒரு படத்தின் உண்மையான வசூலை கண்டுப்பிடிப்பது? நஷ்டம் வந்தால், இத்தனை கோடிகள் நஷ்டம் என துல்லியமாகச் சொல்லும் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் லாபத்தை குறித்து இதுவரை வாய் திறந்ததில்லை.

  தமிழ்ப் படங்களின் வசூலை ஓரளவு கணக்கிடக் கூடிய இடம் சென்னை மட்டுமே (சென்னை சிட்டி மட்டும். சென்னை புறநகர் இடம்பெறாது).  இங்குதான் அதிக மல்டிபிளக்ஸ் உள்ளன. ஓரளவு அரசு நிர்ணயித்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஒரு படத்தின் மொத்த திரையரங்கு வசூலில் 25 சதவீதம் முதல் 35 சதவீதம்வரை சென்னையிலிருந்து கிடைக்கிறது. ஆகவே, சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஒரு படம் வசூலிக்கும் தொகையை ஒட்டு மொத்த தமிழக வசூலின் பிரதிபலிப்பாக பார்க்க முடியும். அதாவது, சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்தப் படம் முதலிடத்தைப் பிடிக்கிறதோ, அதுவே தமிழக அளவிலும் முதலிடத்துக்கு வரும்.

  விஜய், அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நான்குப் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைப் பார்ப்போம்.

  மாஸ்டர் VS நேர்கொண்டப் பார்வை

  விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த இந்தப் படம் கொரோனா முதல் அலை முடிந்து, திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் வெளியானது. திரையரங்குகளுக்கு மக்கள் செல்ல தயக்கம் காட்டியச் சூழலில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாஸ்டரின்,

  முதல்வார இறுதி வசூல் 4.40 கோடிகள்

  மொத்த வசூல் 12.15 கோடிகள்.

  அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நேர்கொண்டப் பார்வை. ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் இந்தி பிங்க் படத்தின் தமிழ் தழுவல். காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என்ற வழக்கமான அஜித் படம் அல்ல. பெண்களின் அடிப்படை உரிமை குறித்துப் பேசிய திரைப்படம். அஜித்தின் பிற படங்கள் போல் இதற்கு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. எனினும் நேர்கொண்டப் பார்வையின்,

  முதல்வார இறுதி வசூல் 5.71 கோடிகள்.

  மொத்த வசூல் 10.60 கோடிகள்.

  பிகில் VS விஸ்வாசம்

  மாஸ்டருக்கு முன்பு விஜய் நடிப்பில் பிகில் வெளியானது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மூன்றாவது படம். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன்,

  முதல்வார இறுதி வசூல் 5.33 கோடிகள்.

  மொத்த வசூல் 14.16 கோடிகள்.

  அஜித்தின் விஸ்வாசம் ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானது. இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போது, இரண்டு படங்களின் வஜிலும் பாதிக்கப்படும் என்ற  கணிப்பைப் பொய்த்து பேட்ட, விஸ்வாசம் இரண்டும் சூப்பர்ஹிட்டானது. விஸ்வாசத்தின்,

  முதல்வார இறுதி வசூல் 3.96 கோடிகள்.

  மொத்த வசூல் 12.35 கோடிகள்.

  சர்க்கார் VS விவேகம்

  முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. அரசியல் கதையான இது, கதைத் திருட்டுச் சர்ச்சையில் சிக்கியது. படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் அரசியல் மட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தின. விஜய் படங்களில் சர்க்கார் படமே மிகப்பெரிய ஓபனிங்கை பெற்ற படமாகும். 2018 நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை வெளியான படம் முதல் ஆறு தினங்களிலேயே மிகப்பெரிய வசூலை பெற்றது. சென்னையில் இதன்,

  முதல்வார இறுதி வசூல் 10.71 கோடிகள்.

  மொத்த வசூல் 15.59 கோடிகள்.

  அஜித்தின் விவேகம் அவரது கரியரில் முற்றிலும் வித்தியாசமான படமாக அமைந்தது. வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா முழுக்க ஆக்ஷனில், வெளிநாட்டில் எடுத்தப் படம் விவேகம். காதல், சென்டிமெண்டுக்கு மிகக்குறைந்த அளவே படத்தில் இடமிருந்தது. நகைச்சுவைக்கு இடமேயில்லை. குடும்ப ரசிகர்கள் விவேகத்துக்கு இல்லாமல் போனதும், படத்தின் பட்ஜெட்டும் தோல்விக்கு காரணமாயின. ஆனாலும், இதன் ஓபனிங் அமாக்களமாக இருந்தது. விவேகத்தின்,

  முதல்வார இறுதி வசூல் 5.21 கோடிகள்.

  மொத்த வசூல் 9.50 கோடிகள்.

  மெர்சல் VS வேதாளம்

  சர்க்காருக்கு முன்பு வெளியான விஜய் படம் மெர்சல். அட்லி, விஜய் கூட்டணியின் இரண்டாவது படம். விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் விஜய் - சமந்தா காதல் காட்சிகள் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. குழப்பமான திரைக்கதையாக இருந்தாலும் படத்தை பெருவாரியானவர்கள் ரசித்தனர். விஜய்யின் மார்க்கெட்டை விஸ்தரித்த படங்களில் இதுவும் ஒன்று. மெர்சலின்,

  முதல்வார இறுதி வசூல் 6.80 கோடிகள்.

  மொத்த வசூல் 14.76 கோடிகள்.

  மெர்சல் திரைப்படம் 2017 இல் வெளியானது. ஆனால், அஜித்தின் வேதாளம் 2015 இல் வெளியானது. விஜய் தொடர்ந்து இடைவெளியில்லாமல் படங்களில் நடிக்க, அஜித் நிதானமாக ஒவ்வொரு படத்திற்கும் இடைவெளிவிட்டு நடித்ததால் நடுவில் தெறி, பைரவா படங்கள் விஜய் நடிப்பில் வெளிவந்தன. வேதாளம் படத்தையும் சிவாவே இயக்கியிருந்தார். 2015 இல் படங்களின் பட்ஜெட், 2017 ஐவிட குறைவு. அதேபோல் திரையரங்கு கட்டணமும் குறைவு என்பதால் வசூலும் குறைவாகவே இருந்தன. வேதாளத்தின்,

  முதல்வார இறுதி வசூல் 3.23 கோடிகள்.

  மொத்த வசூல் 6.75 கோடிகள்.

  விஜய், அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான நான்குப் படங்களின் ஒப்பீடு இது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் வரும் படமே அனேகமாக தமிழக அளவிலான வசூலிலும் முதலிடம் வரும் என்பதால், சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் வரும் படத்தை தமிழக அளவில் முதலிடம் பிடித்ததாக கருத முடியும். இந்த வசூல் புள்ளிவிவரங்களிலிருந்து விஜய், அஜித் இருவரும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் சில கோடிகள் அதிகம் வசூலித்து விஜய் படங்கள் முன்னிலையில் உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னை பாக்ஸ் ஆபிஸில் 15 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்தவை ரஜினி மற்றும் விஜய் படங்களே. இன்னும் அந்த பென்ச் மார்க்கை அஜித் படங்கள் தொடவில்லை. அதேநேரம், தமிழில் பன்னிரண்டு கோடிகளை தாண்டிய மூன்று ஹீரோக்களே உள்ளனர். அவர்கள் ரஜினி, விஜய், அஜித்.

  சரி, இந்த மூன்று பேரில் யாருடைய படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் என்று அறிய அனைவருக்கும் ஆவல் இருக்கும். அது ரஜினி. படம் 2.0. இந்தப் படம் சுமார் 23.50 கோடிகளை சென்னையில் மட்டும் வசூலித்தது. ரஜினி நினைத்தாலும் இந்த வசூலை இனி எட்ட முடியுமா என்பது சந்தேகமே.
  Published by:Karthick S
  First published: