அபராதத்தை கொரோனா நிவாரணத்துக்கு கொடுக்க விருப்பமில்லை - உயர் நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் வாதம்

விஜய்

அபராதத்தைக் கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க விரும்பம்இல்லை என்று விஜய் தரப்பில் உயர் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் 25 லட்சம் ரூபாயை ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கான நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    மேலும், விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வு, விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். மேலும் நுழைவு வரி பாக்கியை வசூலிக்க வணிக வரித்துறைக்கு செலான் பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நடிகர் விஜய் வழக்கு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது, விஜய் தரப்பில் தான் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ஒரு லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசிடம் ஏன் வழங்ககூடாது என கருத்து தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதற்கு விஜய் தரப்பில், ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கொரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை தனி நீதிபதி தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
    Published by:Karthick S
    First published: