அரசு ஊழியர் முதல் சினிமா நடிகர் வரை... நடிகர் விவேக் வாழ்க்கை வரலாறு!

நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

 • Share this:
  1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கோயில்பட்டிஅருகே உள்ள பெருங்கோட்டூர் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன். இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.

  மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப் பார்த்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

  ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவருடைய இயக்கத்தில் உருவான ‘மனதில் உறுதிவேண்டும்’ படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த விவேக் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

  'ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள், சாமி போன்ற படங்களில் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தார் நடிகர் விவேக்.

  லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன. தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின்  படங்களிலும் நடித்துள்ள இவரை, பஞ்சு படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை.

  சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் பொருளாதார நெருக்கடிகளால் வெளியாகாத போதும் அதன் பிறகு விவேக் நாயகனாக நடித்த ’நான்தான் பாலா’, ’பாலக்காட்டு மாதவன்’ போன்ற படங்கள் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

  ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வந்த விவேக், சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி வந்தார்.

  சினிமா ரசிகர்கள் இவரை ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.

  ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ரன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக தமிழ் நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார் விவேக்.

  ஆரம்பத்தில் படங்கள் இல்லாத போது மேல்மாடி காலி என்கிற சின்னத்திரை நாடகத்தில் நடித்திருக்கிறார்.*இவரது மனைவி பெயர் அருள்செல்வி.  இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்களும் உள்ளனர். பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன் இருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு உடல்நல குறைவால் காலமானார்.
  Published by:Vijay R
  First published: