இன்றுடன் 78 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. நடிகர்களுக்கு அவர்கள் பேசும் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளம் கிடைத்தது உண்டு. ஆனால் ஒரு இயக்குனரின் குரலுக்கு தமிழ் ரசிகர்கள் விசில் அடித்த வரலாறு பாரதிராஜாவிற்கு மட்டுமே நிகழ்ந்த அதிசயம்.
தமிழ் சினிமா நாயகிகளை வயல்காட்டில் ஓடவிட்டு கிராமியத்தை தத்துரூபமாக படம்பிடித்துக் காட்டியவர் பாரதிராஜா. சின்னசாமி யாக பிறந்து சுகாதாரத் துறை அதிகாரியாக பணியாற்றிய பாரதிராஜா சினிமாவின் பால் இருந்த ஈர்ப்பால் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல்படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே தமிழ் சினிமா அதுவரை பின்பற்றிய எல்லா இலக்கணங்களையும் உடைத்து வெற்றிகண்டார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சினார், பாரதிராஜா. இவரின் வாழ்விலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைவாழ்க்கையிலும் மிக முக்கியமான திரைப்படம் முதல் மரியாதை. சிவாஜிகணேசனை அதுநாள் வரை யாரும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடுத்தர வயதை கடந்துவிட்ட ஒரு ஆணுக்கு வரும் காதலை படமாக்கி பலரின் மனங்களையும் தொட்டார்.
வயது வந்தோர் மட்டுமே கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க முடியும் என்ற காலகட்டத்தில் கார்த்திக், ராதா ஆகியோரை மிக இளம் வயதிலேயே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து பாரதிராஜா இயக்கியிருந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காதல் காவியங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. மதங்களை கடந்து காதலை பேசியிருந்த இந்தத் திரைப்படம் பாரதிராஜாவிற்கு இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பெரிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் மத சீர்திருத்தம் பேசியிருந்த பாரதிராஜா, வேதம் புதிது திரைப்படத்தில் சாதிய சீர்திருத்தங்களை முன்னெடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சாதிய ஆணவத்திற்கு எதிராக பாரதிராஜா எழுப்பியிருந்த குரல் இன்றும் சினிமாவைத் தாண்டி மக்கள் மனங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
பாரதிராஜாவின் பால்ய பருவ நண்பரான இளையராஜா, பாரதிராஜாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய நபராக துணைநின்றார். பாரதிராஜாவின் வெற்றி திரைப்படங்களில் இளையராஜாவின் பங்கு அளப்பரியது. பின்னர் இவர்கள் இருவர் இடையே நடைபெற்ற மோதலும் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகராக வேண்டும் என்ற கனவோடு திரைத்துறைக்குள் நுழைந்த பாரதிராஜா ஈரநிலம் திரைப்படத்திலும், தற்பொழுது பாண்டியன் குரங்கு பொம்மை, ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தும் மக்கள் மனதை வசீகரித்துள்ளார். இயக்குனர் சங்க பதவிகளிலும், தயாரிப்பாளர் சங்க பதவிகளிலும் முக்கிய பங்காற்றி வரும் பாரதிராஜா.
பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா என தமிழ் சினிமாவிற்கு பல இயக்குனர்களை உருவாக்கி பிதாமகனாக கொண்டாடப்படுகிறார். 6 முறை தேசிய விருதுகளையும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ள பாரதிராஜா தமிழக அரசியலில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே தன் கருத்துக்களால் கவனம் ஈர்த்து வருகிறார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் உதவியுடன் கட்சி துவங்கும் முயற்சியில் ஈடுபட்டதும், தமிழக-கர்நாடக இடையிலான காவிரி பிரச்சனையில் நெய்வேலியில் போராட்டம் நடத்தியதும் என பல சமயங்களில் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளார். தற்பொழுதும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் துவங்கி தமிழ் சினிமாவில் சீர்திருத்த முயற்சியில் ஈடுபட்டு வரும் பாரதிராஜா தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகளின் போது குரல் கொடுக்கும் தவறுவதில்லை. 78 வயதை தொட்டு விட்டாலும் இளமை மாறாமல் தமிழ் சினிமாவில் மிடுக்குடன் வலம் வரும் பாரதிராஜா நடமாடும் அதிசயம்..
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bharathiraja, Director, Director bharathiraja, Happy BirthDay, Tamil Cinema