1988 இல் வெளியான விஜயகாந்தின் நல்லவன் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் வாணி விஸ்வநாத். முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நாயகியாக நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
வாணி விஸ்வநாத்தின் பூர்வீகம் கேரளா. அவரது தந்தை விஸ்வநாதன் ஒரு ஜோதிடர். திருச்சூரில் 1971 இல் பிறந்த வாணி விஸ்வநாத், தனது பள்ளிக் கல்வியை முடித்ததும் சென்னைக்கு வந்தார். அவரது 13 வது வயதிலேயே, வாணி சினிமாவில் நடிப்பார், அரசியலில் நுழைவார் என அவரது தந்தை கணித்தார். அந்த கணிப்பு பொய்யாகவில்லை. தனது 15ஆவது வயதில் 1986 ஆம் ஆண்டு வாணி விஸ்வநாத் மண்ணுக்குள் வைரம் திரைப்படத்தில் அறிமுகமானார். சிவாஜி, சுஜாதா, ராஜேஷ், முரளி ஆகியோருடன் வாணி விஸ்வநாத்தும் அதில் நடித்திருந்தார்.
1988 இல் அப்போது முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்தின் நல்லவன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வாணி விஸ்வாத்துக்கு கிடைத்தது. நல்லவன் படத்தில் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்திருந்தார். படத்தில் அண்ணன், தம்பியாக வருவார். அண்ணனுக்கு ஜோடி ராதிகா, தம்பிக்கு வாணி விஸ்வநாத். அதன்பிறகு பூந்தோட்ட காவல்காரன், தாய்மேல் ஆணை, இது எங்கள் நீதி என தமிழில் நடித்தாலும், அதற்கு முன்பே அவர் மலையாளத்தில் புகழ்பெற ஆரம்பித்திருந்தார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது 1995 இல் வெளியான மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங்.
தமிழில் ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் படங்களை இயக்கிய சித்திக்கும், பிரபல நடிகர் லாலும் நண்பர்கள். இவர்கள் ராம்ஜிராவ் ஸ்பீக்கிங் படத்தை இணைந்து இயக்கி சினிமாவில் அறிமுகமானார்கள். படம் பம்பர் ஹிட்டாக, அதன் இரண்டாம் பாகம் மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங்கை எடுத்தனர். இதில் வாணி விஸ்வநாத் பிரதான வேடம் ஏற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மம்முட்டியுடன் தி ட்ரூத், மோகன்லாலுடன் உஸ்தாத் உள்பட பல படங்களில் நடித்தார். அனேகமாக போலீஸ் அதிகாரி வேடம். தற்காப்புகலை கற்றவர் என்பதால் இவரது படங்களில் தாராளமாக சண்டைக் காட்சிகளும் இருக்கும். மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கிலும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார்.
Also read... 32 வருடங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் நடித்த பாலம் திரைப்படம்
சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் வாணி விஸ்வநாத் நடித்துள்ளார். அந்த பிரபலத்தை வைத்து தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால், திரையில் சோபித்த அளவுக்கு அரசியலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
இதனிடையில் அடியாளாக நடிக்க ஆரம்பித்து வில்லனாக பரிமாணமடைந்த மலையாள நடிகர் பாபுராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆஷிக் அபுவின் சால்ட் அண்ட் பெப்பர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த பிறகு பாபுராஜின் உலகம் மாறிப்போனது. நாயகனாக பல படங்களில் நடித்தார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படத்தில் வில்லனாக நடித்திருப்பதும் இவர்தான்.
தற்போது வாணி விஸ்வநாத் நடிப்பில் தி கிரிமினல் லாயர் திரைப்படம் மலையாளத்தில் தயாராகி வருகிறது. இது நாயகி மையத்திரைப்படம். மைய கதாபாத்திரத்தில் வாணி விஸ்வநாத் நடிக்கிறார். உடன் அவரது கணவர் பாபுராஜ் நடிக்கிறார். பொதுவாக 34 ஆண்டுகள் என்பது இந்திய நடிகைகளின் ரிட்டையர்ட்மெண்ட் வயது. ஆனால், 1988 இல் நாயகியாக நடித்த வாணி விஸ்வநாத் 34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கிறார். உண்மையிலேயே இது சாதனைதான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment