ஒரு காலத்தில் இயக்குனர் கதிர், இதயம், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என்று காதல் படங்களாக எடுத்தார். எல்லாமே தெய்வீகக் காதல். காமத்தின் நிழலே எட்டிப் பார்க்காத சினிமா காதல்கள். அதிலிருந்து நகர்ந்து யதார்த்தத்துக்கு சற்று நெருக்கமாக காதலை சித்தரித்தவர் செல்வராகவன். அவரது திரைக்காதல்களை ரசிக்கிற பெருங்கூட்டம் இங்கிருக்கிறது.
செல்வராகவனின் காதல்கள் விடலைக் காதலில் இருந்து காவியக் காதலை நோக்கி நகர்பவை. விடலைக்காதலின் ஆரம்பத்தை அவர் அடுத்தவர் பொருள் மீதான மனிதனின் ஆசையில் கட்டமைக்கிறார். அது எதிர்பால் ஈர்ப்பாக இருப்பதால் உடனே ஒரு தீவிரத்தன்மை கிடைத்து விடுகிறது. காதல் கொண்டேனில் நாயகி அடுத்தவனின் காதலி. 7 ஜி ரெயின்போ காலனியில் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள்.
மயக்கம் என்ன படத்தில் நண்பனின் காதலி. தெலுங்குப் படம் ஆடவரி மாட்லகு அர்த்தல வேருலே (தமிழில் ரீமேக் செய்யப்பட்ட யாரடி நீ மோகினி) படத்தில் நண்பன் திருமணம் செய்யப் போகும் பெண். புதுப்பேட்டையில் அவன் திருமணம் செய்தது, வேறொருவன் தாலிகட்ட இருந்த பெண். தனக்கு விருப்பமான பெண் தன்னை காதலிக்கவில்லை என்பதைவிட, அவள் இன்னொருவனின் காதலி என்பது வலியை தரக்கூடியது. இளைஞர்களின் இந்த பலவீனத்தில் செல்வராகவன் சரியாக தனது காதலை அமைப்பதை காணலாம்.
செல்வராகவனின் திரைக்காதல்கள் வழக்கமான சினிமாவின் போலி தெய்வீகத்தன்மையை கொண்டிருப்பதில்லை. நாயகி மீதான நாயகனின் விருப்பத்தில் எப்போதும் காமம் சொட்டிக் கொண்டேயிருக்கும். காதல் கொண்டேனில் நாயகி பேசிக்கொண்டே இயல்பாக தோள்பட்டை பிராவை சரிசெய்வதை, காதலனுடன் தொலைபேசி கூண்டுக்குள் தழுவிக் கொள்வதை நாயகனின் பார்வை வழியாக காட்டுவதன் மூலம் அவனது காமத்தை வெளிப்படுத்துகிறார்.
7 ஜி ரெயின்போ காலனியில் நாயகன் தன்னைப் பார்த்ததும் மேலாடையை சரி செய்வது, துப்பட்டாவை எடுத்துப் போர்த்திக் கொள்வது என நாயகனின் பார்வை எப்போதும் நாயகியின் மார்பை தீண்டிக் கொண்டேயிருக்கும். அதனால் தான் பேருந்தில் எதேச்சையாக அவனது கை தனது மார்பில் பட்டதும் நாயகி பொங்கிவிடுகிறாள். இதை மயக்கம் என்ன திரைப்படத்திலும் பார்க்கலாம். இந்த காமத்துடன் இயைந்த காதலே செல்வராகவனின் திரைக்காதல்கள் மீதான பார்வையாளர்களின் இரண்டாவது ஈர்ப்பாக அமைகிறது.
இதன் அடுத்தக்கட்டம் நாயகியின் பார்வை நாயகன்பால் திரும்புவது. எந்தப் பெண்ணும் உடல்ரீதியான அத்துமீறலை பொதுவெளியில் விரும்புவதில்லை. அதுவும் அடுத்த ஆடவனின் முன்பு. செல்வராகவன் நாயகிகளின் முதல் ஆண்கள் இந்த அத்துமீறலை தொடர்ச்சியாக செய்கிறவர்கள். இது அவளை விரும்பும், அவளுக்காக எதையும் செய்யத்துணியும் நாயகனின் முன்பு அவளை சிறுமையுறச் செய்கிறது. 7ஜி ரெயின்போ காலனியின் நாயகன், நாயகிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறான். ஆனால் நாயகி, தனக்கு நிச்சயிக்கப்பட்டவனுக்காக அந்த அன்பை உதறுகிறாள். யாருக்காக அவள் அப்படியொரு முடிவை எடுத்தாளோ, அவனே அவளிடம் அத்துமீறும்போது, அதுவும் நாயகனின் முன்னிலையில் அது நடக்கும் போது, அதற்கு மேலும் அவள் நாயகனின் அன்பை காணாதவள் போல் நடிக்க முடியாமல் போகிறது. இது ஒருவகையான பிளாக்மெயில். இந்த பிளாக்மெயிலின் மூலமே காலங்காலமாக தமிழ் சினிமா நாயகிகளின் காதலை பெற்று வந்திருக்கிறது. இதற்கு அடுத்தக்கட்டம் காவியத்தன்மை.
பைக் பயணத்தோடு விக்ரமின் மகான் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்!
விடலைக்காதல் விடலைக்காதலிலேயே முடிந்தால் அதற்கொரு அர்த்தமும் மதிப்பும் இருப்பதில்லை. அதனை காவியத்தன்மைக்கு நகர்த்த வேண்டும். நாயகனின் காதல் வெறும் காமம் மட்டுமில்லை, அதையும் தாண்டியது என்பதை காட்டுவதன் வழியாக இந்த காவியத்தன்மையை செல்வராகவன் எட்டுகிறார். நாயகனின் காதலே (அதாவது காதலியே) அவனது துயரங்களையும், பலவீனத்தையும் துடைத்தெறிவதை நாம் பார்க்கலாம். காதல் கொண்டேனில் அனாதையான நாயகனுக்கு வெளிச்சமாக வருவது அவளது காதலிதான். 7 ஜி ரெயின்போ காலனி நாயகனுக்கு பொறுப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தருவதும் அவனது காதலிதான். மயக்கம் என்ன படத்திலும் அப்படியே. காதலிகளின் தியாகத்தின் வழியாக விடலைக்காதலுக்கு காவியத்தன்மையை செல்வராகவன் அளிக்கிறார். இவர்களில் ஒருவர் உயிர்தியாகம் பண்ணுகையில் அது தெய்வீகத்தன்மையை எட்டுகிறது. செல்வராகவனின் அனைத்து திரைக்காதல்களும் இந்தப் படிநிலைகளால் உருவானவை. சிலவற்றில் அழுத்தமாக, சிலவற்றில் மேலோட்டமாக. ஆனால், இந்தப் படிநிலையில்லாமல் அவரது திரைக்காதல்கள் இல்லை.
எக்ஸெலெண்ட், சூப்பர், பிரிலியண்ட்... கார்த்திக் சுப்புராஜை வாழ்த்திய ரஜினிகாந்த்!
விடலைப் பருவத்திலிருந்து காவியத்தன்மையை நோக்கிய இந்தப் பயணம் ஆபத்தானது. விடலைக்காதல் என்று அவர் காட்டுவது அப்பட்டமான ஈவ்டீஸிங். விருப்பமில்லாத பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை தருவது. பெண்ணை புரிந்து கொள்ளாத ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இது. அதை செய்வது நாயகன் என்பதாலும், நாயகனுக்காக படைக்கப்பட்டவள் நாயகி என்ற நமது சினிமா கற்பிதத்தாலும், இந்த ஈவ்டீஸிங் நம்மை அவ்வளவாக உறுத்துவதில்லை. இந்த காதலை அமரப்படுத்துவதன் வழியாக இதற்கொரு அங்கீகாரத்தையும் அவர் வழங்குகிறார்.
காதலர் தினத்தில் காதல் கணவரை விவாகரத்து செய்த பிரபல நடிகை
விடலை காதலின் ஒருபக்கம் கட்டற்ற உணர்ச்சியும், அன்பும், தியாகமும் என்றால் இன்னொரு பக்கம் பரஸ்பர புரிதலும், மரியாதையும், விட்டுக் கொடுத்தலும். இந்த இரண்டுப் பக்கங்களும் சேர்ந்ததுதான் காதல். இதில் இரண்டாவது பக்கத்தை செல்வராகவனின் சினிமா பெரும்பாலும் தவிர்த்து விடுகிறது. இந்த சமநிலை தவறிய காதல் திரையில் ரசிக்கப்படும் அளவுக்கு நிஜத்தில் ருசிப்பதில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Selvaraghavan, Valentines day