ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வடிவேலுவின் சிம்மாசனத்தில் அவரால் மட்டுமே மீண்டுமே அமர முடியும் - சுராஜ்

வடிவேலுவின் சிம்மாசனத்தில் அவரால் மட்டுமே மீண்டுமே அமர முடியும் - சுராஜ்

சுராஜ் - வடிவேலு

சுராஜ் - வடிவேலு

தமிழ் சினிமாவில் அவரது சிம்மாசனம் இன்னும் காலியாக உள்ளது, அவர் மட்டுமே அதில் மீண்டும் அமர முடியும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ் சினிமாவில் தனது சிம்மாசனத்துக்கு தான் தகுதியானவர் என்பதை வடிவேலு உறுதிப்படுத்த விரும்பியதாக இயக்குநர் சுராஜ் தெரிவித்துள்ளார். 

  துரதிர்ஷ்ட வசமாக வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து ஓரங்கட்டப்பட்டபோது, அவரை இயக்குனர் சுராஜ் தான் இயக்கிய கத்தி சண்டை படத்தில் நடிக்க வைத்தார். தற்போது வடிவேலு ரீ-என்ட்ரியாகும் படத்தை சுராஜ் தான் இயக்குகிறார். அவர்களின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து வரும் இயக்குநர் சுராஜ், தானும் வடிவேலுவும் இணைந்து பணிபுரிந்த தலைநகரம் திரைப்படத்தில் இடம்பெறும் நாய்சேகர் கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு ஸ்பின்ஆஃப் படம் இதுவல்ல என்று விளக்கினார்.

  இது குறித்து முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுராஜ், ”இது ஒரு வித்தியாசமான கேரக்டர். கோவிட்-19 லாக்டவுன் காலத்துல நானும் வடிவேலு அண்ணனும் நிறைய பேசிக்கிட்டிருந்தோம். அப்போது தான் அவர் படங்களில் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். 'ஒரு வேற லெவல்-ல ரீ-என்ட்ரி இருக்கணும், அதுக்கு அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சொன்னேன்’. நாய்சேகர் என்று டைட்டில் வைத்து, இந்த தலைப்பைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தேன். பின்னர், நான் அவரிடம் மூன்று ஸ்கிரிப்ட்களை சொன்னேன். இந்த கதாபாத்திரம் அவரை கவர்ந்தது. அவர் இதுவரை செய்யாத ஒன்று என்று வடிவேலு அண்ணன் உணர்ந்தார். மேலும் இந்த கேரக்டரில் நிறைய வெரைட்டிகளைக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டார்”.

  தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தான் தனது ரீ-என்ட்ரிக்கான கதவைத் திறக்க முடியும் என்று வடிவேலு உணர்ந்ததாகக் குறிப்பிட்ட சுராஜ், "இங்கே அவருடைய தயாரிப்பு நிறுவனத் தலைவர் தமிழ்க்குமரனைத் தொடர்பு கொண்டோம். பின்னர் நாங்கள் சுபாஸ் சாரிடம் பேசினோம். அவர், தான் வடிவேலு காமெடியின் தீவிர ரசிகன் என்றும், அவர் மீண்டும் நடிப்பதை பார்க்க விரும்புவதாகவும் கூறி சந்திக்க அழைப்பு விடுத்தார். அடுத்த வாரம் பெங்களூரில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் சந்தித்தோம். அங்கு தான் படத்தை உறுதி செய்தோம். அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம், இதை ஒரு பொழுதுபோக்கு நகைச்சுவைப் படமாக உருவாக்க வேண்டும் என்பது தான்" என்றார்.

  10 வருடங்கள் கழித்தும் அது மாறவில்லை... வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!

  ”வடிவேலு அண்ணன் நிதானமாக எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அவருடன் பல படங்களில் பணியாற்றியதால், அந்த வித்தியாசத்தை என்னால் பார்க்க முடிந்தது. ஒரு காட்சி ஒர்க் ஆகுமா என்று தொடர்ந்து கேட்பார். தமிழ் சினிமாவில் அவரது சிம்மாசனம் இன்னும் காலியாக உள்ளது, அவர் மட்டுமே அதில் மீண்டும் அமர முடியும். எனவே, அவர் அதற்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த விரும்பினார். பழைய மாதிரி இல்லை என சொல்லிவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vadivelu, Tamil Cinema