ஊரடங்கு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் அவசர ஆலோசனை

ஊரடங்கு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் அவசர ஆலோசனை

தியேட்டர்

நெருக்கடி சூழல் குறித்து விவாதிக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

  • Share this:
    கொரோனோ இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்புக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தையும், தமிழக எண்ணிக்கை பத்தாயிரத்தையும் கடந்துள்ளது. நேற்று தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

    கொரோனா முதல் அலையின் போது திரையரங்குகள் முழுமையாக மூடப்பட்டன. நஷ்டம் தாங்காமல் 100-க்கும் அதிகமான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்ததும் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. மாஸ்டர், சுல்தான், கர்ணன் என பெரிய நடிகர்களின் படங்கள் நல்ல வசூலை பெற்றன. ஆனால், சிறிய படங்களுக்கு திரையரங்குகள் காற்று வாங்கின. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை விஸ்வரூபமெடுக்க, 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். இது திரையரங்குகளை கடுமையாக பாதித்தது. நேற்றைய அரசின் அறிவிப்பு, திரையரங்கு உரிமையாளர்களை கவலைப்பட வைத்துள்ளது.

    இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை கட்டாய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் இரவுக்காட்சி திரையிட முடியாது. ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. இது திரையரங்க உரிமையாளர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும், அவர்கள் எதிர்பார்த்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகப் போவதில்லை. ரிலீஸை தள்ளி வைப்பதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

    இந்த நெருக்கடி சூழல் குறித்து விவாதிக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. பல முக்கியமான முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும், அரசு சார்பில் திரையரங்குகளுக்கு நிவாரண உதவியும் கேட்கப்பட வாய்ப்புள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: