Remake Movies: தமிழில் தயாராகும் பிற மொழி ரீமேக் படங்கள்!

தமிழில் வெளியாகவிருக்கும் ரீமேக் படங்கள்

ஷங்கர் தனது அந்நியனை இந்தியிலும், மோகன்ராஜா மலையாள லூசிபர் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்கிறார்கள்.

  • Share this:
பிறமொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது காலங்காலமாக நடந்துவரும் நடைமுறை. தமிழில் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழித் திரைப்படங்களிலும் ரீமேக்குகள் சாதாரணம். ஆனால், கொரோனா பேரிடருக்குப் பிறகு தமிழில் ரீமேக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முன்னணி இயக்குனர்களும் கதைப் பஞ்சத்தால் ரீமேக்கையே நாடுகின்றனர். ஷங்கர் தனது அந்நியனை இந்தியிலும், மோகன்ராஜா மலையாள லூசிபர் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் ரீமேக் செய்யப்படும் முக்கியமான சில படங்களைப் பார்க்கலாம்.

1. கூகுள் குட்டப்பன்
மலையாளத்தில் சுராஜ் வென்ஜாரமூடு, சௌபின் ஷகிர் நடிப்பில் 2019-ல் வெளியான மலையாளத் திரைப்படம் ஆன்ட்ராயிடு குஞ்சப்பன். ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தை தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவரது உதவி இயக்குனர் சபரி படத்தை இயக்குகிறார்.

2. தள்ளிப் போகாதே
அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் தள்ளிப் போகாதே படத்தை இயக்கியுள்ளார். அனுபாமா பரமேஸ்வரன் நாயகி. இந்தப் படம் தெலுங்கில் 2017-ல் நானி நடிப்பில் வெளியான நின்னுக்கோரி படத்தின் ரீமேக்காகும். சுமார் 18 கோடியில் தயாரான நின்னுக்கோரி 53 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. தெலுங்கில் இந்தப் படத்தை ஷிவா நிர்வானா இயக்கியிருந்தார்.

3. பத்து தல
2017-ல் நார்தன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் முப்தி. சிவா ராஜ் குமார், ஸ்ரீமுரளி நடித்திருந்தனர். கன்னடத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப் படத்தை சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். நார்தன் மற்றும் கிருஷ்ணன் இணைந்து தமிழில் இதை இயக்குகின்றனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.

4. பெல் பாட்டம்
பெல் பாட்டம் 2019-ல் வெளிவந்த தெலுங்குப் படம். ஜெயதீர்த்தா இயக்கிய இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி, ஹரிப்ரியா நடித்திருந்தனர். இந்தப் படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்கின்றனர். கழுகு கிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். மகிமா நம்பியார் நாயகி. சத்ய சிவா இதனை இயக்குகிறார். எண்பதுகளில் நடக்கும் துப்பறியும் கதையாக இது தயாராகிறது. இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் பெல் பாட்டம் என்ற படம் தயாராகியுள்ளது. அதற்கும் இந்தப் படங்களுக்கும் சம்பந்தமில்லை.

5. ஆர்ட்டிகிள் 15
இந்தியில் 2019-ல் வெளியான ஆர்ட்டிகிள் 15, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15 வது பிரிவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அனுபவ் சின்கா படத்தை இயக்க, ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார். சாதிப் பிரச்சனையை காத்திரமாக பேசிய இப்படத்தை அதே பெயரில் தமிழில் உதயநிதி நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். இயக்குகிறவர் அருண்ராஜா காமராஜ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. ஓ மணப்பெண்ணே
ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ஓ மணப்பெண்ணே என்ற படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இது 2016-ல் தெலுங்கில் வெளியான பெல்லி சூப்லு படத்தின் ரீமேக். தெலுங்குப் படத்தை தருண் பாஸ்கர் இயக்க, விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்திருந்தனர். பட்ஜெட்டைவிட பல மடங்கு லாபத்தை இந்தப் படம் பெற்றுத் தந்தது.

7. சண்டைக்காரி
விமல், ஸ்ரேயா நடிப்பில் மாதேஷ் இயக்கிவரும் படம் சண்டைக்காரி. இந்தப் படம் 2012-ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திலீப், மம்தா மோகன்தாஸ், சீதா, சாய் குமார் நடிப்பில் வெளிவந்த மை பாஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். மை பாஸ் படத்தை ஜீத்து ஜோசப் 2009-ல் வெளிவந்த தி ப்ரப்போசல் திரைப்படத்தை மேலோட்டமாக தழுவி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8. கர்ஜனை
2015-ல் நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடித்த என்ஹெச் 10 திரைப்படத்தையே கர்ஜனை என்ற பெயரில் த்ரிஷா நடிப்பில் ரீமேக் செய்துள்ளனர். சுந்தர் பாலு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சாதி ஆணவக் கொலையை மையப்படுத்திய படம் இது.

9. அந்தகன்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்த இந்திப் படம், அந்தாதுன் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக்காகிறது. பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிக்க, இதனை தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார்.

10. தி கிரேட் இந்தியன் கிச்சன்
ஜியோ பேபி இயக்கத்தில் இந்த வருடம் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது. நிமிஷா சஜயன், சுராஜ் வென்ஜாரமூடு ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தை, ஆர்.கண்ணன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.

இவை தவிர மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் உள்பட மேலும் பலமொழிப் படங்கள் தமிழில் ரீமேக்காகி வருகின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: