முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஊரடங்கு தளர்வு அறிவிப்பு... அடுத்தடுத்து ரிலீஸாகும் பெரிய படங்கள்!

ஊரடங்கு தளர்வு அறிவிப்பு... அடுத்தடுத்து ரிலீஸாகும் பெரிய படங்கள்!

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

வலிமை வெளியாகி இரண்டு வார இடைவெளியில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் வெளியாகும் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் ஊரடங்கிற்கு தளர்வு அறிவித்ததை தொடர்ந்து அடுத்த இரண்டு மாதத்திற்கு பல பெரிய படங்கள் ரிலீசாக வரிசைகட்டி காத்திருக்கின்றன.

தமிழகத்தில் அண்மையில் இரவு நேர மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கிற்கு தளர்வு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உடனடியாக ரிலீஸாக காத்திருக்கும் டசன் கணக்கான பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ரிலீஸ் தேதிகளை குறிப்பதில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

முதலாவதாக விஷால் நடித்துள்ள "வீரமே வாகை சூடும்" திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதியும், விஜய் சேதுபதி நடித்துள்ள "கடைசி விவசாயி" மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள FIR திரைப்படம் பிப்ரவரி 11-ஆம் தேதியும், அதன்பின் அஜித் நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை திரைப்படம் பிப்ரவரி இறுதியில் 25ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வலிமை வெளியாகி இரண்டு வார இடைவெளியில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் மூன்றாண்டுகளுக்கு பின் திரையரங்கில் வெளிவரும் படம் என்பதால், இந்த படம் மீதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீசாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகும் இப்படம் வசூலில் புது சாதனையை நிகழ்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதே நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வெளிவரும் சிவகார்த்திகேயனின் படம் என்பதால் இப்படம் மீதும் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மட்டுமல்லாது ஏப்ரல் மாதம் 14-ம் தேதி விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் அடுத்து வரும் மூன்று மாதங்கள் தமிழ்த்திரை ரசிகர்களுக்கு திருவிழா மாதங்களாக மாற உள்ளன. அதேசமயம் விரைவில் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் தமிழ் திரையுலகில் மேலோங்கி காணப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Suriya, Actor Thalapathy Vijay, Actor vishal, Ajith, Tamil Cinema, Theatre