இணையம் வந்த பிறகு குறிப்பிட்ட செய்தி உண்மையா பொய்யா என்பதை சரிபார்க்கும் வசதிகள் விரல் நுனியில் வந்துவிட்டன. முன்பு இருந்ததைவிட இப்போது தகவல்களின் நம்பகத்தன்மை கூடியிருக்க வேண்டும். மாறாக ஃபேக் நியூஸ்களால் உலகம் சூழப்பட்டிருக்கிறது. த்ரிஷாவின் சமீபத்திய படப்பிடிப்புத்தள புகைப்படத்தை உத்திரபிரதேச போலீஸ் என்று ஒரு அரசியல் கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள்.
தங்கள் மாநில பெருமையை சொல்ல வெளிநாட்டில் உள்ள கட்டடங்கள், சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள் என்று பலவற்றை சுட்டு போட்டோஷாப் செய்வதை அரசியலில் ஒரு அங்கமாகவே சிலர் செய்து வருகின்றனர். இதில் அரசு அதிகாரிகளும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமரின் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பயனாளிகள் என வடஇந்தியாவில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களில் தமிழின் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் படம் இடம்பெற்றிருந்தது. இப்போது மாட்டியிருப்பது த்ரிஷா.
வெளிநாடு சென்ற போது கொரோனா தொற்றுக்கு ஆளான த்ரிஷா, அதிலிருந்து மீண்டு மறுபடியும் படப்பிடிப்புக்கு செல்ல துவங்கியுள்ளார். ஹைதராபாத்தில் அவர் நடிக்கும் பிருந்தா வெப் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. த்ரிஷா நடிக்கும் முதல் வெப் தொடர் இது. இதில் அவர் போலீசாக நடிக்கிறார். படப்பிடிப்பு இடைவெளையில் போலீஸ் உடையுடன் நாய்களை கொஞ்சியபடி இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார். இப்போது அரசியல் கட்சியினர் சிலர் அந்தப் புகைப்படத்தை உத்திரபிரதேச பெண் போலீஸ் என்று பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். வடஇந்திய மாநிலங்களில் இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
வடஇந்தியாவில் உள்ளவர்களுக்கு த்ரிஷாவை தெரியாது. அது நியாயம். ஆனால், நம்மூரில் உள்ளவர்கள்? உத்திரப்பிரதேச போலீஸ் நாயை கொஞ்சுகிறாரா... எங்க தமிழ்நாடு போலீஸ் எப்படிப்பட்டது பாருங்கள் என சமீபத்தில் ஒரு பெண் போலீஸ் மயக்கமான நபரை தோளில் சுமந்து சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் முடிந்துள்ளது. கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி படங்கள் வெளிவர வேண்டும். தமிழ், தெலுங்கில் புதிய படங்கள் அரிதாகி வருவதால் தற்போது வெப் தொடர் பக்கம் சாய்ந்திருக்கிறார். வெற்றிவாகை கிடைக்கட்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.