நடிகை த்ரிஷா நடித்திருக்கும் ’பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. பின்னர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக தமிழில் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்தப்படத்தில் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் த்ரிஷா நடித்த வேறெந்த படமும் வெளியாகவில்லை.
இந்நிலையில் த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பரமபதம் விளையாட்டு கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், மற்ற படங்களைப் போல இந்தப் படத்தின் வெளியீடும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
அதன்படி ’பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் ஹாட் ஸ்டார், ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.