பொன்னியின் செல்வனை படித்தவர்களில் குந்தவையை நேசிக்காதவர்களே இருக்கமுடியாது. அழகும், ஆண்கள் மட்டுமே நிறைந்த சோழ அமைச்சரவையே கட்டுப்படுத்தும் கம்பீரமும் அனைவரது வசீகரிக்கும் கதாப்பாத்திரம். குந்தவையாக திரிஷா நடிக்கிறார் என்ற போது மாற்றுக்கருத்தே இருந்திருக்காது.
மௌனம் பேசியதே மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான திரிஷா சமீபத்தில் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார். நடிப்பு முதிர்ச்சியாக மாறியிருக்கிறதே தவிர தோற்றத்தில் அன்று பார்த்த அதே மௌனம் பேசியதே திரிஷாதான்.
இந்த நிலையில் 'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி. சத்யா இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பொன்னியின் செல்வனுக்கு பிறகு திரிஷா நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்பபு நிலவுகிறது.
இந்த நிலையில் 'ராங்கி' படம் தொடர்பாக செய்தியாளர்களை நடிகை திரிஷா சந்தித்தார். அவரிடம், 96 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் இருந்து ரசிகர்கள் உங்களுக்கு அதிகமாக ஆகிவிட்டார்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திரிஷா, அதே ரசிகர்கள்தான் இவர்களும், எனக்கு இரண்டு வருடம் படம் வராத காலத்திலும் கூட ரசிகர்கள் என்னை கைவிடவில்லை. ரசிகர்கள் அன்பு எனக்கு எப்போதும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக எதிர்பார்ப்பு மிக்க ஒன்று, மணிரத்னம் அவர்களின் படம் வேற. குறிப்பாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எடுக்கும் படங்கள் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கிறது. காலங்கள் மாறுவதால் மக்களின் ரசனைகளும் மாறுகிறது. அதனால் இதுபோன்ற கதைகளில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.
படத்திற்காக அதிகம் மேக்கப் செய்வது தொடர்பாக ?
திரிஷா: 96 மற்றும் ராங்கி திரைப்படங்களுக்காக பெரிதும் மேக்கப் தேவைப்படவில்லை. எனது இயக்குநர்களும் சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலே போதும் என்று கூறுகிறார்கள். இயக்குநர்களின் சொல்படியே நான் மேக்கப் போடுவேன். பொன்னியின் செல்வன் ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை போன்றது, அதற்காக அதிகளவு மேக்கப் போடவேண்டிய தேவை இருந்தது. அதிகம் மேக்கப் பொருட்கள் உபயோகிக்காமல் இருப்பதும்கூட என் தோற்றத்திற்கு காரணமாகவும் இருக்கலாம்.
உங்கள் அழகின் ரகசியம் ?
திரிஷா: தெரியவில்லை, எல்லோரும் அதைப்பற்றி கேட்கிறார்கள். அதை நான் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக பார்க்கிறேன். ஆனால் அது மரபு வழி காரணமாக கூட இருக்கலாம்.
நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக ஒரு தகவல் இருந்தது, உண்மையா ?
திரிஷா: அந்த தகவல்கள் ஒரு சதவீதம் கூட உண்மையில்லாதவை, எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மந்தமும் இல்லை.
திரைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது, உங்களுக்கு வரும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
திரிஷா: நான் எப்போதும், நேர்மறையான கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன், எதிர்மறையான கருத்துக்கள் எதையும் நான் கவனித்துக்கொள்வதில்லை.
உங்கள் வாழ்க்கையில் 3 கேள்விகளைக் கேட்ககூடாது என்றால் அவை என்ன?
திரிஷா: எப்போது திருமணம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் இது போன்றது தான் என்று பதிலளித்தார்.
இயக்குனர் சரவணன் பேசியபோது,
படத்தின் டீஸர் வந்து 3 வருடங்களுக்கும் மேலாகிறது, ஏன் படம் வர இவ்வளவு தாமதம் ?
சரவணனன்: படத்தின் பணிகள் நடைபெற்று வரும்போதே கொரோனா வந்துவிட்டது. மேலும் சென்சார் போன்ற வேலைகளில் தாமதம் ஆகிவிட்டது.
உங்கள் படங்களில் பெண்களுக்கான கதாபாத்திரங்கள் மிகவும் அருமையாக அமைவதற்கான காரணங்கள் என்ன ?
சரவணனன்: பெண்களும் நாயகிகள் தான். அதனால் அவர்களின் கதாபாத்திரங்கள் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
எங்கேயும் எப்போதும் படம் பண்ணிய பிறகு பெரிய பட வாய்ப்புகள் ஏதும் முயற்சி செய்யவில்லையா?
சரவணன்: படத்திற்கான வாய்ப்புகள் எதையும் நான் தேடி போவதில்லை. வாய்ப்புகள் அமைந்தால் மட்டுமே நான் செய்வேன் என்று பதிலளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A.R.murugadoss, Actress Trisha