Actor Vivek: உதயநிதி படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு நினைவஞ்சலி!

உதயநிதி ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் படத்தின் படப்பிடிப்பின் போது மறைந்த நடிகர் விவேக்கிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

  • Share this:
    பொள்ளாச்சியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் படத்தின் படப்பிடிப்பின் போது மறைந்த நடிகர் விவேக்கிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    தேர்தல் முடிந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். நேற்று பொள்ளாச்சியில் அவர் நடிக்கும் ஆர்ட்டிகிள் 15 இந்திப்பட ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆர்ட்டிகிள் 15 2019-ல் இந்தியில் வெளியான திரைப்படம். ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சாதி, மத, இன, மொழி, பால் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை ஆர்ட்டிகிள் 15 தடை செய்கிறது. மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான மிக முக்கியமான திரைப்படம் இது. சுமார் 100 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.



    நேற்று பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தொடங்கும்முன் உதயநிதி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மறைந்த நடிகர் விவேக்கின் புகைப்படத்துக்கு முன் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    இதுகுறித்து, "ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். மறைந்த அண்ணன் விவேக் அவர்களின் திருவுருவப் படத்துக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த அண்ணனின் வழி நடப்போம்" என தனது ட்விட்டரில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார் நடிகர் விவேக். அவரது இழப்பு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மீளா துயரை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: