எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரத்திடம் நானும் கார்த்தியும் பேசினோம், இப்போது அந்த மரம் மிகப்பெரிய மரமாக வளர்ந்துள்ளது என உழவன் விருதுகள் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
நீர்நிலை மீட்பு, பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம், சந்தைப்படுத்துதல் என விவசாயம் சார்ந்த புதுமைகளை விவசாயத்தில் உட்புகுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.
Also read... உக்ரைனில் நிற பிரச்சினை உள்ளது... ரஷ்யா வழியாக மாணவர்களை அழைத்து வருவது பாதுகாப்பானது - ஜக்கிவாசு தேவ்
தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, அகரம் பவுண்டேஷன் எப்படி நெருக்கமாக நான் துவங்கினேனோ அதே போன்றுதான் கார்த்திக் இதனை துவங்கினார். விவசாயிகளின் குரலாக இருக்க விரும்புகிறோம், விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்த செல்ல வேண்டும். முதல்படி துவங்கி வைப்பது மட்டும் தான் கடினம். அதன் பின் காலம் எப்படி சென்றது என தெரியவில்லை.
அகரம் பவுண்டேஷன் துவங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. கிட்டத்தட்ட 5000 மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்று உள்ளனர். என் உறவினர்கள் இன்றும் விவசாயம் செய்து வருகின்றனர்,இன்றும் விவசாயத்தை மக்கள் செய்து வருகின்றனர் அதனை சாதாரண ஒரு விஷயமாக பார்க்க கூடாது, கல்வியில் கூட விவசாயம் உற்பத்தி பற்றி நாம் படிப்பதில்லை.
என் குழந்தையிடம் நெல்,வெண்டைக்காய் எங்கு இருந்து கிடைக்கிறது என்று கேட்டால் கடையில் கிடைக்கிறது என்றுதான் கூறுவார்கள். எங்கு இருந்து உண்மையில் இந்த பொருட்கள் வருகிறது என தற்போது உள்ள நபர்களுக்கு தெரியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக எவ்வளவு வேர்வை சிந்துகின்றனர், எவ்வளவு கடினம் என்பதை நம்முடைய குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் அப்படி செய்தால் அவர்கள் விவசாயத்தை பார்த்து கொள்வார்கள் .
மரங்கள் நாம் பேசுவதை கேட்கிறது
எங்கள் வீட்டில் காய்ந்துபோன மரம் இருந்தது. தோட்டகாரர் அதனை வெட்டிவிடலாம் என்றார். நானும், கார்த்தியும் மரங்களிடம் பேசினால் வளருமாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். நான் மரத்திடம் சென்று நீ ஏன் வளரவில்லை, உன் அருகில் இருப்பவன் வளர்கிறான் என்று கூறிவிட்டு சென்று விட்டேன்.
ஆனால், கார்த்தி மரத்தை கட்டிப்பிடித்து அன்பு காட்டிவிட்டார் போல அந்த மரம் வளர்ந்து பக்கத்தில் உள்ள மரத்தை விட உயரமாக நிற்கிறது. தோட்டக்காரர் வியந்து விட்டார். மரங்கள் நாம் பேசுவதை கேட்கிறது என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.